விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவது முட்டாள்தனமானது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முதாசர் நாசர் விமர்சித்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, பேட்டிங்கில் பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை செட் செய்துவருகிறார். இதுவரை 70 சர்வதேச சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் அசத்தலாக ஆடி தனது அபாரமான பேட்டிங்கால் சர்வதேச அளவில் பல பெரிய பெரிய ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் விராட் கோலி. 

விராட் கோலியை போலவே திறமையின் அடிப்படையில் பாபர் அசாமும் சிறந்த பேட்ஸ்மேன் தான். எதிர்காலத்தில் விராட் கோலியை போலவே பாபர் அசாமும் எதிர்காலத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக ஒரு ரவுண்டுவருவார் என பல முன்னாள் ஜாம்பவான்கள் நம்புகின்றனர். பாபர் அசாமை புகழ்ந்தும் வருகின்றனர். 

பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் தான் என்றாலும், அவரை இப்போதே விராட் கோலியுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவர் இப்போதுதான் அவரது கெரியரின் தொடக்கத்தில் இருக்கிறார். ஆனால் விராட் கோலியோ சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் மற்றும் 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்காக வெற்றிகளை குவித்து கொடுத்துவருகிறார். 

அதேபோலவே பாபர் அசாமும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். திறமையான பேட்ஸ்மேன்கள் பலர், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. எனவே பாபர் அசாம் இப்போது ஆடுவதை போலவே, இன்னும் 6 ஆண்டுகளுக்கு இடைவிடாது சிறப்பாக ஆடினால் தான் அவரை கோலியுடன் ஒப்பிட முடியும். 

ஆனால் பலர் அதற்குள்ளாக பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது மட்டுமல்லாமல், விராட் கோலியைவிட பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்கிற அளவிற்கு சில முன்னாள் வீரர்கள் உணர்ச்சிபொங்க கருத்து கூறி வருகின்றனர்.

அதற்குள்ளாகவே விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவது அபத்தம் என்று பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் யூனிஸ் கான் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் முதாசர் நாசரும் அதே கருத்தை பிரதிபலித்துள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த நாசர், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு ஹீரோ தேவைப்படுகிறார். அதுதான் பாபர் அசாம். பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதால், அவரை ரசிகர்கள் பாகிஸ்தானின் ஹீரோவாக பார்க்கிறார்கள். ஆனால் அவரை நிறைய பேர் கோலியுடன் ஒப்பிடுகிறார்கள். கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவது முட்டாள்தனமானது. கோலியை சச்சினுடன் மட்டும் தான் ஒப்பிட வேண்டும் என்று அவர் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.