இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி 1992ல் முதல்முறையாக உலக கோப்பையை வென்றது. அதுதான் முதலும் கடைசியும். அதன்பின்னர் அந்த அணி உலக கோப்பையை வெல்லவில்லை. அந்த உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் முதல் 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்ற பாகிஸ்தான் அணி, தொடரிலிருந்து வெளியேறும் நிலையில் இருந்தது. ஆனால் அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்த பாகிஸ்தான் அணி, அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. 

லீக் சுற்றில் 8ல் 7 போட்டிகளில் வெற்றி பெற்று, அந்த உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட நியூசிலாந்து அணியை அரையிறுதியில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி. நியூசிலாந்து நிர்ணயித்த 263 ரன்கள் என்ற இலக்கை பாகிஸ்தான் அணி, இன்சமாம் உல் ஹக்கின் அதிரடியான அரைசதத்தால் எட்டி வெற்றி பெற்றது. இன்சமாம் 37 பந்தில் 60 ரன்களை குவித்து, பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு முன்னேற உதவினார். 

ஃபைனிலில் இங்கிலாந்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 249 ரன்களை அடித்தது. 250 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியை 227 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி உலக கோப்பையை முதல் முறையாக வென்றது. இம்ரான் கான் இறுதி போட்டியில் 72 ரன்களை விளாசினார். 

உலக கோப்பையை வென்றபின்னர் இம்ரான் கான், பாகிஸ்தானின் ஹீரோவாக பார்க்கப்பட்டார். அதுதான் அவரது கடைசி ஒருநாள் போட்டி. உலக கோப்பையை வென்ற கெத்துடன், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இம்ரான் கான். அந்த உலக கோப்பையை வென்றதன் தாக்கம் பாகிஸ்தானில் நீண்ட காலம் இருந்ததால் இம்ரான் கான் மிகப்பெரிய ஹீரோவாக அங்கு திகழ்ந்தார். 

ஆனால் அந்த உலக கோப்பையை வெல்ல அவரது பங்களிப்பு பூஜ்ஜியம் என்று ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், இம்ரான் கான் தான் உலக கோப்பையை வென்று கொடுத்தார் என்பது மிகப்பெரிய பொய். அந்த உலக கோப்பையின் அனைத்து போட்டிகளையும் நான் பார்த்திருக்கிறேன். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் தோற்றது. இம்ரான் கான் அந்த போட்டியில் ஆடவில்லை. 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஆமீர் சொஹைலின் சதத்தால் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் 74 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட். இந்த போட்டியிலும் இம்ரான் கான் ஆடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இம்ரான் கான் 10 ரன்களுக்கு அவுட்டானார். இந்தியாவுக்கு எதிராக இம்ரான் கான் ரன்னே அடிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெறும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். இலங்கைக்கு எதிரான போட்டியில் மறுபடியும் டக் அவுட்டானார். 

ஆனால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. முக்கியமான அரையிறுதி போட்டியில் கூட அவர் சரியாக ஆடவில்லை. அரையிறுதி போட்டியில் 93 பந்தில் வெறும் 44 ரன்கள் மட்டுமே அடித்தார். அவருக்கு பின் வந்த பேட்ஸ்மேன்கள் தான், பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர்.அதிர்ஷ்டவசமாக அந்த போட்டியில் இன்சமாம் உல் ஹக் 37 பந்தில் 60 ரன்களை விளாசினார். அதனால்தான் வெற்றி பெற்று ஃபைனலுக்குள் நுழைய முடிந்தது.

Also Read - இப்போதே ஓய்வு குறித்து அறிவித்த விராட் கோலி

ஃபைனலில் இம்ரான் கான் 72 ரன்கள் அடித்தார். ஆனாலும் அந்த போட்டியில் அவரால் பாகிஸ்தான் ஜெயிக்கவில்லை. வாசிம் அக்ரம் ஆலன் லாம்ப் மற்றும் கிறிஸ் லூயிஸ் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் வாசிம் அக்ரம் வீழ்த்தினார். அதனால்தான் கோப்பையை வெல்ல முடிந்தது. அரையிறுதியில் சிறப்பாக ஆடிய இன்சமாம் உல் ஹக் மற்றும் ஃபைனலில் அசத்திய வாசிம் அக்ரம் ஆகிய இருவரால் தான் பாகிஸ்தான் கோப்பையை வென்றதே தவிர இம்ரான் கானால் அல்ல என்று அந்த ரசிகர் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.