உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி வெளியேறியது. 

பாகிஸ்தான் அணி தவறுகளையும் சிக்கல்களையும் கலைந்து மீண்டெழ வேண்டிய அவசியம் உள்ளது. உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி நிறைய திறமையான வீரர்களை அடையாளம் கண்டு அணியில் சேர்த்து அணியை வலுவான அணியாக கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

பாகிஸ்தான் அணியை கட்டமைப்பதற்கு பிரதமர் இம்ரான் கானே நேரடியாக களத்தில் இறங்கப்போவதாக தெரிவித்திருந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டை வலுப்படுத்தி சிறந்த வீரர்களை அணியில் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். 

பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்துரின் பதவிக்காலம் வரும் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. மிக்கி ஆர்துரின் பயிற்சிக்காலத்தில் பாகிஸ்தான் அணி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. இவரது பயிற்சிக்காலத்தின் கீழ்தான் 2017ல் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றதோடு, டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தது. 

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமாக சொதப்பியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக படுமோசமாக ஆடி தொடர்களை இழந்தது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி ஏழாம் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதுடன் அதிக ஈடுபாடு காட்ட வேண்டிய நிலையில் உள்ளது. 

இந்நிலையில், தனது பயிற்சிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், தனது பதவிக்காலத்தை நீட்டித்துக்கொடுத்தால் பாகிஸ்தான் அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியாக தன்னால் உருவாக்கமுடியும் என தற்போதைய பயிற்சியாளர் மிக்கி ஆர்துர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருந்தார். மேலும் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சியில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவரை கேப்டன்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். 

ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய காரியத்தின் கிரிக்கெட் கமிட்டி உறுப்பினர்கள் அலசி ஆராய்ந்து சில பரிந்துரைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கொடுத்துள்ளனர். கேப்டனை மாற்ற வேண்டும் என்ற பரிந்துரையையும் அவர்கள் முன்வைத்துள்ளதாக கிரிக்கெட் வாரிய தலைவர் எஹ்சன் மணி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் மிக்கி ஆர்துரை நீட்டிக்கவைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மிக்கி ஆர்துர் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியில் நீடிக்க விரும்பியபோதிலும், அவரை நீட்டிக்கவைக்க கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.