இந்திய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் ஆடுவதை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டது. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் ஆடுவதையே இந்திய அணி நிறுத்திவிட்டது. சர்வதேச போட்டிகளில் மட்டுமே இந்திய அணி, பாகிஸ்தானுடன் ஆடிவருகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக மற்ற அணிகளும் கூட பாகிஸ்தானிற்கு சென்று ஆடுவதில்லை. பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு அமீரக மைதானங்களையே தங்களது சொந்த மைதானங்களாக பாவித்து ஆடிவந்தன. 

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சென்று ஆடிவருகிறது. அதிலும் முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி இன்று நடக்கிறது. அடுத்த ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடக்கவுள்ளது. 

ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே சுமூக உறவு இல்லாததாலும் வீரர்களின் பாதுகாப்பு கருதியும் இந்திய அணி பாகிஸ்தானில் ஆடுவதில்லை. எனவே பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி கலந்துகொள்ளுமா என்பதை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிவு செய்து பிசிசிஐ அறிவிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சி.இ.ஓ வாசிம் கான், இந்திய அணி பாகிஸ்தானில் ஆட ஒப்புக்கொள்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்திய அணி முடிவை அறிவிக்கலாம். ஆனால் இதுகுறித்த இறுதி முடிவு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலும், ஐசிசியும் தான் எடுக்க வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே நல்ல உறவும் தொடர்பும் இருக்கிறது. ஆனால் இந்திய கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு அதிகம் இருக்கிறது. அதனால் இரு அணிகளும் ஆடலாமா என்று நாங்களே அவர்கள் பின்னால் ஓடிக்கொண்டிருக்க முடியாது. பாகிஸ்தானுடன் பொதுவான ஒரு இடத்தில் ஆட இந்திய அணி முன்வந்தால், அதையாவது தெரிவிக்க வேண்டும் என்று வாசிம் கான் தெரிவித்துள்ளார்.