உலக கோப்பை தொடரில் முதல் 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்ற பாகிஸ்தான் அணி, எஞ்சிய 4 போட்டிகளிலும் வென்றது. நியூசிலாந்தும் பாகிஸ்தானும் ஒரே புள்ளிகளை பெற்றிருந்த போதிலும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

உலக கோப்பை தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியை மறுசீரமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்துர் உட்பட பயிற்சியாளர் குழுவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மாற்றவுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் அணியில் சில களையெடுப்புகளும் செய்யப்பட்டுள்ளன. 2019-2020ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய ஒப்பந்த பட்டியலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், ஷோயப் மாலிக் மற்றும் முகமது ஹஃபீஸ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. மாலிக் உலக கோப்பையுடன் ஓய்வு பெற்றுவிட்டார். டி20 கிரிக்கெட்டில் மட்டும் ஆடுவதாக தெரிவித்தார். ஆனால் ஹஃபீஸ் ஓய்வுலாம் பெறவில்லை. ஆனாலும் அவரது பெயர் பட்டியலில் இல்லை. 

ஏ, பி, சி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பாகிஸ்தான் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் 33 வீரர்கள் இருந்தனர். ஆனால் இந்த முறை வெறும் 19 வீரர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். 

பிரிவு ஏ - பாபர் அசாம், சர்ஃபராஸ் அகமது, யாசிர் ஷா. 

பிரிவு பி - ஆசாத் ஷாஃபிக், அசார் அலி, ஹாரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக், முகமது அப்பாஸ், ஷதாப் கான், ஷாஹின் ஷா அஃப்ரிடி, வஹாப் ரியாஸ். 

பிரிவு சி - அபித் அலி, ஹசன் அலி, ஃபகார் ஜமான், இமாத் வாசிம், முகமது ஆமீர், முகமது ரிஸ்வான், ஷான் மசூத், உஸ்மான் ஷின்வாரி.