உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்று இந்தியா - பாகிஸ்தான் போட்டி. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் பேராவலுடன் அந்த போட்டியை பார்ப்பார்கள். இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியதே இல்லை. 

எனவே முதன்முறையாக உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் பாகிஸ்தான் உள்ளது. ஆனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்துவது கடினம். இந்தியாவுக்கு எதிரான போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியமான போட்டி. 

ஏனெனில் அந்த அணி இதுவரை ஆடியுள்ள 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஒரு போட்டி கைவிடப்பட்டதால் ஒரு பாயிண்ட் கிடைத்தது. அந்த வகையில், 4 போட்டிகளில் ஆடி வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. எனவே உலக கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க வேண்டும் எனில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தியாக வேண்டும். 

இப்படிப்பட்ட நெருக்கடியான சூழலில் முக்கியமான போட்டியில், வீழ்த்துவதற்கு கடினமான இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் 16ம் தேதி மான்செஸ்டாரில் நடக்கவுள்ளது. 

இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசிய வக்கார் யூனிஸ், இந்த உலக கோப்பையில் நான் இதுவரை பார்த்தவரையில், எதிரணியின் முதல் ஒரு சில விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்தவில்லை எனில், அதன்பின்னர் பெரும் சிக்கல் தான். புதிய பந்தில் விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அதேபோல பேட்டிங் அணி, முதல் 10 ஓவர்களுக்கு கவனமாக ஆட வேண்டும்; விக்கெட்டை விரைவில் இழந்துவிடக்கூடாது. இன்னிங்ஸின் தொடக்கத்தில் விக்கெட்டை இழக்கவில்லை எனில், அதன்பின்னர் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தலாம். ஏனெனில் புதிய பந்துதான் நன்றாக ஸ்விங் ஆகும். அதன்பின்னர் ஸ்விங்குலாம் இருக்காது. பேட்ஸ்மேன்கள் அடித்து ஆடலாம் என்று தெரிவித்தார்.