இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணிகளுமே வெற்றி பெறும் தீவிரத்தில் கடுமையாக ஆடும். கடந்த சில ஆண்டுகளாக இரு அணிகளும் சர்வதேச தொடர்களை தவிர வேறு போட்டிகளில் ஆடுவதில்லை என்பதால் சர்வதேச தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும்போது எதிர்பார்ப்பு எகிறுகிறது. 

2017ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது. அதன்பின்னர் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி பழிதீர்த்தது. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதுவரை உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியதே கிடையாது என்பதுதான் வரலாறு. அதனால் உலக கோப்பையில் இந்த முறை முதன்முறையாக இந்திய அணியை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது பாகிஸ்தான். 

சர்ஃபராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ் போன்ற அனுபவ வீரர்களையும் ஃபகார் ஜமான், பாபர் அசாம் போன்ற இளம் வீரர்களையும் கொண்ட நல்ல கலவையிலான அணியாக உள்ளது. 

அதேநேரத்தில் கோலி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்படுகிறது. கோலி தலைமையிலான இந்திய அணி வலுவாக அணியாக இருப்பதோடு, கடந்த சில ஆண்டுகளாக அபாரமாக ஆடிவருகிறது. தற்போதைய சூழலில் இரு அணிகளுமே ஒன்றிற்கு ஒன்று சளைத்தது அல்ல. 

இந்நிலையில், உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டி பல வகைகளில் முக்கியமானது என்பதால் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடுவோம் என்றும், அந்த ஒரு போட்டியை மட்டுமல்லாமல் ஒவ்வொரு போட்டியையுமே இந்தியாவுக்கு எதிரான போட்டியாகவே கருதி சிறப்பாக ஆடுவோம் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது அதிரடியாக தெரிவித்துள்ளார்.