92 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; ஆறுதல் வெற்றியோடு நாடு திரும்பும் பாகிஸ்தான்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று கிறிஸ்ட்சர்ஜில் நடந்தது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகீன் அஃப்ரிடி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, ஹசீபுல்லா கான் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
இதில், ஹசீபுல்லா கான் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரிஸ்வான் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பாபர் அசாம் 13 ரன்களில் வெளியேற, ஃபகர் ஜமான் 33 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் டிம் சௌதி, மேட் ஹென்ரி, லாக்கி ஃபெர்குசன் மற்றும் இஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணிக்கு ஃபின் ஆலன் 22 ரன்கள் எடுக்க, ரச்சின் ரவீந்திரா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். கிளென் பிலிப்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பாகிஸ்தான் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் இப்திகார் அகமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். கேப்டன் ஷாகீன் அஃப்ரிடி மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். உசாமா மிர் மற்றும் ஜமான் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக பாகிஸ்தான் இந்த ஆண்டில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. மேலும், பாகிஸ்தான் டி20 கேப்டன் ஷாகீன் அஃப்ரிடி 4 தோல்விகளுக்கு பிறகு ஒரு கேப்டனாக தனது முதல் டி20 போட்டி வெற்றியை பெற்றுள்ளார்.
டி20 போட்டியில் வெற்ற பெற்ற மகிழ்ச்சியோடு பாகிஸ்தான் நாடு திரும்புகிறது. எனினும், 4 போட்டிகளில் தோல்வி அடைந்து தொடரை 1-4 என்று இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.