Asianet News TamilAsianet News Tamil

Bangladesh vs Pakistan ஃபகர் ஜமான் அரைசதம்.. 2வது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என டி20 தொடரை வென்றது பாகிஸ்தான் அணி.
 

pakistan beat bangladesh in second t20 and win series
Author
Dhaka, First Published Nov 20, 2021, 7:30 PM IST

டி20 உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, சூப்பர் 12 சுற்றில் இந்தியா, நியூசிலாந்து ஆகிய பெரிய அணிகள் மற்றும் ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய 5 அணிகளையும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது. ஆனால் அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று தொடரை விட்டு ஏமாற்றத்துடன் வெளியேறியது.

பாகிஸ்தான் அணி டி20 உலக கோப்பையில் அடைந்த காயத்திற்கு மருந்தாக அமைந்துள்ளது வங்கதேச சுற்றுப்பயணம். டி20 உலக கோப்பை தோல்விக்கு பின்னர், உடனடியாக அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலக கோப்பைக்கு தயாராக தொடங்கிவிட்டது பாகிஸ்தான் அணி. அந்த தயாரிப்பை வங்கதேசத்துக்கு எதிராக ஆடிவரும் இந்த தொடரிலேயே ஆரம்பித்துவிட்டது பாகிஸ்தான் அணி.

டி20 உலக கோப்பை தொடரில் ஆடாத வீரர்கள் சிலருக்கு இந்த தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி இன்று தாக்காவில் நடந்தது.

முதல் போட்டியை போலவே, இந்த போட்டியிலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, மறுபடியும் பேட்டிங்கில் சொதப்பியது. தொடக்க வீரர்கள் முகமது நயீம் (2), சைஃப் ஹசன் (0) ஆகிய இருவருமே சொதப்பினர். 3ம் வரிசையில் ஆடிய ஷாண்டோ சிறப்பாக ஆடி அதிகபட்சமாக 40 ரன்கள் அடித்தார். அஃபிஃப் ஹுசைன் (20), கேப்டன் மஹ்மதுல்லா (12), நூருல் ஹசன் (11) என அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் வங்கதேச அணி வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தது.

109 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் அசாம் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரிஸ்வானும் ஃபகர் ஜமானும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி 85 ரன்களை சேர்த்தனர். ரிஸ்வான் 39 ரன்னில் ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடிய ஃபகர் ஜமான் அரைசதம் அடித்து 57 ரன்களுடன் கடைசிவரை களத்தில் நின்று இலக்கை எட்டி பாகிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார்.

19வது ஓவரில் இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என டி20 தொடரை வென்றது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios