இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி வென்ற நிலையில், டி20 தொடரை இலங்கை அணி வென்றுள்ளது. 

டி20 போட்டிகள் லாகூரில் நடந்துவருகிறது. முதல் போட்டியில் இலங்கை 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது. 182 ரன்கள் அடித்த இலங்கை அணி, பாகிஸ்தான் அணியை 147 ரன்களுக்கு சுருட்டி, 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது. 

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாகிஸ்தான் அணியில் எடுக்கப்பட்ட உமர் அக்மல், முதல் போட்டியில் முதல் பந்திலேயே அவுட்டான நிலையில், இரண்டாவது போட்டியிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி வெளியேறினார். 

உமர் அக்மல் 10வது முறையாக சர்வதேச டி20 போட்டியில் டக் அவுட்டாகியிருக்கிறார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் திலகரத்னே தில்ஷானுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார் உமர் அக்மல். தில்ஷானும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 10 முறை டக் அவுட்டாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தில்ஷானின் கெரியர் முடிந்துவிட்டது. ஆனால் உமர் அக்மல் இன்னும் ஆடிவருவதால் தில்ஷானின் சாதனையை முறியடித்து முதலிடத்தை உமர் அக்மல் பிடித்துவிடுவார். இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியிலேயே டக் அவுட்டாகி, உமர் அக்மல் இந்த மோசமான பட்டியலில் முதலிடத்தை பிடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.