2011 உலக கோப்பையில் தோனி யுவராஜ் சிங்குக்கு முன் களமிறங்கியது குறித்து, அப்போது இந்திய அணியின் மனவள பயிற்சியாளர் பாடி அப்டான் பேசியுள்ளார்.
மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் சேவாக் ரன் ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே நடையை கட்ட, சச்சினும் 18 ரன்களில் வெளியேற, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு, காம்பீர் - கோலி இணை பொறுப்பாக ஆடி மூன்றாவது விக்கெட்டிற்கு ஓரளவு ரன்களை குவித்தது. பிறகு காம்பீர் மற்றும் தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் முக்கியமான இன்னிங்ஸை ஆடிய கம்பீர் 97 ரன்களில் ஆட்டமிழக்க, தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 91 ரன்கள் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
இந்த போட்டியில் 3வது விக்கெட்டாக கோலி அவுட்டான பிறகு நல்ல ஃபார்மில் இருந்த யுவராஜ், பேட்டிங் ஆட செல்லாமல், தோனி களத்திற்கு சென்றார். அந்த உலக கோப்பை முழுக்க யுவராஜ் சிங் அபாரமாக ஆடினார். ஆனால் தோனியோ ஃபைனலுக்கு முந்தைய ஒரு போட்டியில் கூட நன்றாக ஆடவில்லை. அப்படியிருக்கையில், நால்ல ஃபார்மில் இருந்த யுவராஜை அனுப்பாமல், நெருக்கடியான சூழலில் தோனி இறங்கியது பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் நெருக்கடியான சூழலை நிதானமாக கையாண்டு 91 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.
அந்த சம்பவம் குறித்து அப்போதைய இந்திய அணியின் மனவள பயிற்சியாளராக இருந்த பாடி அப்டான் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய பாடி அப்டான், தோனி அந்த உலக கோப்பையில் ஃபைனலுக்கு முந்தைய 8 போட்டிகளில் ஒன்றில் கூட சரியாக ஆடவில்லை. ஆனால் யுவராஜ் சிங் அருமையாக ஆடி ஸ்கோர் செய்திருந்தார். ஆனாலும் ஃபைனலில் யுவராஜ் சிங்கிற்கு முன்பாக தோனி இறங்கினார். அந்த முமெண்ட் தோனி இறங்குவதற்கு சரியான முமெண்ட் ஆகும். சர்வதேச கிரிக்கெட்டில் மிகக்குறைவான வீரர்களே உயர் அழுத்தமான சூழல்களில் சிறப்பாக ஆடுவார்கள். அப்படியான வீரர் தோனி. ஆனால் யுவராஜ் சிங் அந்த மாதிரியான வீரர் இல்லை என்று பாடி அப்டான் தெரிவித்துள்ளார்.
