உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இன்னும் 12 நாட்களே உள்ளது. 1992ம் ஆண்டுக்கு பிறகு இந்த உலக கோப்பையில்தான் லீக் சுற்றில் அனைத்து அணிகளும் அனைத்து அணிகளுடனும் மோத உள்ளன. அதனால் இந்த உலக கோப்பை மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளில் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளும் வலுவாக உள்ளன. 

முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போதைய இந்திய அணி மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பது இந்திய அணிக்கு கூடுதல் பலம். டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் லெஜண்ட் தோனி அணியில் இருப்பது கூடுதல் பலம். சமபலம் வாய்ந்த சிறந்த அணியாக இந்திய அணி உள்ளது. 

இந்நிலையில், கோலி தலைமையிலான இந்திய அணியின் உலக கோப்பை வாய்ப்பு குறித்து ஆங்கில நாளிதழ் இந்துவிற்கு முன்னாள் மனவள பயிற்சியாளர் பாடி அப்டன் பேசியுள்ளார். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக கருதப்படும் இந்த அணிகளுக்கு இடையேயான போட்டி உண்மையாகவே ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும். 

2011ல் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்த சிறப்பம்சம் தற்போதைய அணியிடமும் இருக்கிறதா என்று கேட்டால், கண்டிப்பாக இருக்கிறது. அது தோனி தான். தோனி தலைமையிலான அணியை விட தற்போதைய அணி உடலளவிலும் மனதளவிலும் மிகவும் வலிமையான அணியாகவே இருக்கிறது. தற்போதைய அணியின் புள்ளிவிவரங்களை எல்லாம் பார்க்க நான் விரும்பவில்லை. ஆனால் வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் தோனி தலைமையிலான அணிக்கு நிகரானது தற்போதைய அணி. சொல்லப்போனால் அதைவிட சிறந்த அணி என்று பாடி அப்டன் தெரிவித்துள்ளார்.