உலக கோப்பையில் அரையிறுதியில் தோற்று இந்திய அணி வெளியேறிய நிலையில், அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடவுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. 

உலக கோப்பை தொடரில் வாங்கிய அடிக்கு பிறகு, இந்திய அணியின் சிக்கல்களை கலைந்து வலுவான அணியாக கட்டமைக்கும் தீவிரத்தில் அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ளது. 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக அணியின் சில மாற்றங்கள் செய்யப்படும். அதேபோலவே உலக கோப்பையில் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி ஏமாற்றிய நிலையில், இவர்கள் இருவரில் ஒருவர் ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கோலி கேப்டனான பிறகு களையெடுக்கப்பட்ட முக்கியமான வீரர் அஷ்வின். அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடி சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்த நிலையில், கோலி கேப்டனானதும் அவர்கள் இருவருமே ஓரங்கட்டப்பட்டு ரிஸ்ட் ஸ்பின் ஜோடியான குல்தீப் - சாஹல் அணியில் எடுக்கப்பட்டனர். அதன்பின்னர் அஷ்வின் அப்படியே ஓரங்கட்டப்பட்டார். ஆனால் ஜடேஜா ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மென்சால் அணியில் மீண்டும் இணைந்தார். 

குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி அணியில் இணைந்த புதிதில் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினர். ஆனால் உலக கோப்பையில் இருவருமே மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்க தவறிவிட்டனர். நிறைய ஸ்பின்னர்கள் புதிதாக வந்தபோது சுழலில் மிரட்டுவார்கள். அவர்களது கையசைவுகளையும் வேரியேஷன்களையும் எதிரணி பேட்ஸ்மேன்கள் கண்டுபிடித்த பிறகு அவர்களது பருப்பு வேகாது. அப்படி காலப்போக்கில் வேகாத பருப்பானவர்கள் தான் குல்தீப்பும் சாஹலும். 

இவர்கள் கடந்த ஆண்டு வரை சிறப்பாக வீசியிருக்கலாம். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே இவர்களின் பவுலிங் எடுபடவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் நன்றாக வீசினர். ஆனால் உலக கோப்பைக்கு முந்தைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலேயே இவர்களின் பருப்பு வேகவில்லை. ஐபிஎல்லிலும் அடி வாங்கினர். குல்தீப்பின் கையசைவுகளையும் வேரியேஷன்களையும் எதிரணிகள் கண்டுபிடித்துவிட்டன. சாஹலிடம் வேரியேஷனே கிடையாது. ஆனாலும் கேப்டன் கோலிக்கு நெருக்கமாக இருப்பதால் அணியில் கண்டிப்பாக இடம்பிடித்துவிடுகிறார். 

உலக கோப்பையில் குல்தீப் - சாஹல் ஜோடி அசத்தும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்திய அணிக்கு மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்து கொண்டிருந்த இவர்களின் பவுலிங், உலக கோப்பையில் எடுபடவில்லை. உலக கோப்பையில் இவர்கள் இந்திய அணிக்கு தேவையான போது விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்கவில்லை. இருவரும் பெரிதாக சோபிக்காததால் தான் தொடரின் பிற்பாதியில் இருவரும் சேர்ந்து அணியில் எடுக்கப்படவில்லை. 

இவர்கள் இருவருமே விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்தனர். ஆனால் ரன்களை விட்டுக்கொடுத்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுகின்றனரே என்பதற்காக அணியில் இருந்தனர். ஆனால் உலக கோப்பையில் ரன்களையும் விட்டுக்கொடுத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தவில்லை என்பதால் இவர்களில் ஒருவர் ஓரங்கட்டப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. உலக கோப்பை தொடரில் சாஹல் 12 விக்கெட்டுகளையும் குல்தீப் வெறும் 6 விக்கெட்டுகளையும் மட்டுமே வீழ்த்தினார்.

சாஹல் - குல்தீப் இருவரில் ஒருவர் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நீக்கப்பட வாய்ப்புள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்தியா ஏ அணியில் ஆடிவரும் வாஷிங்டன் சுந்தர் அபாரமாக வீசிவருகிறார். வாஷிங்டன் சுந்தர் ரன்களை வாரிக்கொடுக்காமல் கட்டுக்க்கோப்பாக வீசுவதுடன் விக்கெட்டையும் வீழ்த்துகிறார். எனவே சாஹல் - குல்தீப் இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. 

வாஷிங்டன் சுந்தர் பவுலிங் மட்டுமல்லாது பேட்டிங்கும் ஆடக்கூடியவர் என்பதால் அவருக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.