கடந்த 10ம் தேதி தொடங்கிய புனே டெஸ்ட், நான்காம் நாளான இன்றே முடிந்தது. முதல் இன்னிங்ஸில் 601 ரன்கள் என்ற மெகா ஸ்கோரை அடித்த இந்திய அணி, தென்னாப்பிரிக்க அணியை முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கும் இரண்டாவது இன்னிங்ஸில் 189 ரன்களுக்கும் சுருட்டி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்த புனே ஆடுகளத்தில் நடந்த இந்த போட்டியில், தென்னாப்பிரிக்க அணி பவுலிங்கிலும் சோபிக்கவில்லை, பேட்டிங்கிலும் சொதப்பிவிட்டனர். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே படுமோசமாக சொதப்பி படுதோல்வியடைந்தது தென்னாப்பிரிக்க அணி. 

அடுத்த போட்டி வரும் 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அந்த போட்டியில் தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் கேசவ் மஹாராஜ் ஆடமாட்டார் எனவும் அவருக்கு பதிலாக இடது கை ஸ்பின்னர் ஜார்ஜ் லிண்டே ஆடுவார் எனவும் தென்னாப்பிரிக்க அணி அறிவித்துள்ளது. 

புனே டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது ஃபீல்டிங் செய்யும்போது தோள்பட்டையில் கேசவ் மஹாராஜுக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் அதன்பின்னர் அவர் இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டிங் ஆடினார். முதல் இன்னிங்ஸில் 72 ரன்களை குவித்து அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் முடிந்தவரை போராடி பார்த்தார். அவர் தான் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இந்நிலையில், போட்டிக்கு பின்னர் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில், அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம், அடுத்த போட்டிக்குள் சரியாவதற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுவிட்டது. 

எனவே மஹாராஜ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜார்ஜ் லிண்டே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்த போட்டி வரும் 19ம் தேதி ராஞ்சியில் தொடங்கவுள்ளது.