3வது ஆஷஸ் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெறும் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 3வது டெஸ்ட் இன்று தொடங்கியது.
இன்று தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. முதலிரண்டு போட்டிகளை போலவே இங்கிலாந்து அணி இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் படுமட்டமாக பேட்டிங் ஆடியது.
வழக்கம்போலவே இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோ ரூட் மட்டுமே ஓரளவிற்கு நன்றாக ஆடி அரைசதம் அடித்தார். அவரும் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் ஹசீப் ஹமீத் (0) மற்றுமொரு முறை ஏமாற்றமளித்தார். ரோரி பர்ன்ஸுக்கு பதிலாக தொடக்க வீரராக எடுக்கப்பட்ட ஜாக் க்ராவ்லியும் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 14 ரன்கள் மட்டுமே அடித்தார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களான பென் ஸ்டோக்ஸ் (25) மற்றும் ஜோஸ் பட்லர் (3) ஆகியோரும் ஏமாற்றமளித்தனர். ஆலி போப்புக்கு பதிலாக அணியில் எடுக்கப்பட்ட ஜானி பேர்ஸ்டோ 35 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் ராபின்சன் 22 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மற்றுமொருமுறை மொத்தமாக சொதப்ப, அந்த அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 185 ரன்களுக்கு சுருண்டது.
ஆஸ்திரேலியா அணி சார்பில் அதிகபட்சமாக கம்மின்ஸ் மற்றும் நேதன் லயன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் அடித்துள்ளது. வார்னர் 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் மார்கஸ் ஹாரிஸ் 20 ரன்களுடனும், நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்ட நேதன் லயனும்(0) களத்தில் உள்ளனர்.
இந்த போட்டியிலும் இவ்வளவு குறைவான ஸ்கோரை முதல் இன்னிங்ஸில் அடித்த பிறகு, இனிமேல் இந்த ஆட்டத்திற்குள் இங்கிலாந்து வருவது மிகக்கடினம். எனவே இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பு மிகப்பிரகாசமாக உள்ளது.
