இந்திய அணி வங்கதேசத்துடனான தொடரில் ஆடிவருகிறது. வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி மட்டுமே எஞ்சியுள்ளது. அந்த போட்டி இன்று கொல்கத்தாவில் பகலிரவு போட்டியாக தொடங்குகிறது. இந்த தொடர் முடிந்ததும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிற்கு வந்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வது குறித்து நேற்று எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு நேற்று கூடி ஆலோசித்துவிட்டு அணியை அறிவித்தது. ஒருநாள் மற்றும் டி20 ஆகிய இரண்டு தொடர்களுக்குமான அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. 

டி20 அணியில் ஷிவம் துபேவுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. காயத்தால் கடந்த ஒருசில தொடர்களில் ஆடாமல் இருந்துவந்த புவனேஷ்வர் குமார், காயத்திலிருந்து மீண்டு மீண்டும் அணியில் இணைந்துள்ளார். புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்பியதால் கலீல் அகமது நீக்கப்பட்டுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சனுக்கு, அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பளிக்கப்படவில்லை. வாய்ப்பே கொடுக்காமல், அவரை இந்த தொடருக்கான அணியிலிருந்து தேர்வாளர்கள் புறக்கணித்துள்ளனர். 

சஞ்சு சாம்சன் உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதால் வங்கதேசத்துக்கு எதிரான டி20 அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடுவதற்கு அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், சும்மாவே அணியில் வைத்திருந்துவிட்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சனை காரணமே இல்லாமல் நீக்கிய சம்பவம், தேர்வாளர்கள் மீது கடும் விமர்சனங்களையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. 

டி20 அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார். 

ஷிவம் துபேவிற்கு ஒருநாள் அணியிலும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஷிவம் துபே முதன்முறையாக ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இன்னும் அணிக்கு திரும்பாததால் ஷிவம் துபே ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேதர் ஜாதவ் மீண்டும் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமார் காயத்திலிருந்து மீண்டுவிட்டதால் ஒருநாள் அணியிலும் மீண்டும் இடம்பிடித்துள்ளார். பும்ரா இன்னும் அணிக்கு திரும்பாததால் தீபக் சாஹரும் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

ஒருநாள் அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார்.