இந்தியாவிற்கு எதிராக நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று டிராபியுடன் நாடு திரும்பிய ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸை வரவேற்க ரசிகர்கள் யாரும் விமான நிலையம் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 19 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா முதலில் விளையாடிய 240 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஷ் லபுஷேன் ஜோடி வெற்றியை தேடிக் கொடுத்தது. இறுதியாக 43 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக ஆஸ்திரேலியா 6ஆவது முறையாக உலகக் கோப்பை டிராபையை வென்றது.
கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் நடந்த ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா 6 முறை சாம்பியனாகியுள்ளது. இதுவரையில் டிராபியை வென்ற ஆஸ்திரேலியா கேப்டன்களின் பட்டியல்:
- ஆலன் பார்டர் (1987)
- ஸ்டீவ் வாக் (1999)
- ரிக்கி பாண்டிங் (2003 மற்றும் 2007)
- மைக்கேல் கிளார்க் (2015)
- பேட் கம்மின்ஸ் (2023)
இந்த நிலையில் தான் டிராபியுடன் நாடு திரும்பிய ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸை வரவேற்க ரசிகர்கள் யாரும் விமான நிலையம் வரவில்லை. ஆஸி, கேப்டனுக்கே இந்த நிலைமையா என்று விமர்சிக்கும் அளவிற்கு நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பத்திரிக்கை மற்றும் மீடியாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
