முதல் தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடர் நடந்துவருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி நடந்த போட்டிகளில் நிறைய வீரர்கள் அருமையாக ஆடியுள்ளனர். பெங்கால் வீரர் மனோஜ் திவாரி, ஹைதராபாத் அணிக்கு எதிராக முச்சதம் அடித்தார். அதேபோல மும்பை வீரர் சர்ஃபராஸ் கான், உத்தர பிரதேச அணிக்கு எதிராக அபாரமாக ஆடி முச்சதம் விளாசி அசத்தினார். 

மேலும் பல வீரர்கள் இரட்டை சதம் மற்றும் சதம் விளாசினர். அந்தவகையில், இவர்களின் வரிசையில், இவற்றையெல்லாம் விட மிகச்சிறந்த இன்னிங்ஸை ஆடி டெல்லி அணிக்கு அபாரமான வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறார் நிதிஷ் ராணா. 

டெல்லி மற்றும் விதர்பா அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய விதர்பா அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதில் 83 ரன்களை வாசிம் ஜாஃபர் அடித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய டெல்லி அணி 163 ரன்களுக்கே சுருண்டது. 

Also Read - முதல் முச்சதம் அடித்த மும்பை வீரர்.. அருமையான பேட்டிங்

16 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய விதர்பா அணியின் தொடக்க வீரர் சஞ்சய் ரகுநாத் அரைசதம் அடித்தார். இவர் மந்தமாக ஆடி அரைசதம் அடிக்க, மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபயாஸ் ஃபாஸல் 68 பந்தில் அதிரடியாக ஆடி 43 ரன்களை அடித்துவிட்டு ஆட்டமிழந்தார். வாசிம் ஜாஃபர் 40 ரன்கள் அடித்தார். முடிந்தவரை விரைவாக ரன்களை குவித்துவிட்டு டெல்லி அணியை பேட்டிங் ஆடவிட்டால், ஜெயித்துவிடலாம் என்பதால், விதர்பா வீரர்கள் அடித்து ஆடினர். 

கணேஷ் சதீஷ் அதிரடியாக ஆடி 92 பந்தில் சதமடித்தார். 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அவர் சதமடிக்க, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடிய அக்‌ஷய் வத்கர் 82 பந்தில் 70 ரன்களை குவித்தார். இதையடுத்து விதர்பா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் அடித்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

மொத்தமாக விதர்பா அணி 346 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில், கடைசி நாளின் உணவு இடைவேளைக்கு முன்பாக டெல்லி அணியை இரண்டாவது இன்னிங்ஸை ஆட விட்டது. கடைசி நாளில் அதுவும் வெறும் 2 செசனில் இந்த இலக்கை விரட்டுவது மிகவும் சவாலான காரியம்.

Also Read - 4 வருஷம் கழித்து சேவாக்கிற்கு நக்கலா பதிலடி கொடுத்த அக்தர்

டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் குணால் சந்தேலா மற்றும் ஹிதேன் தலால் ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். குணால் 75 ரன்களும் தலால் 82 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். இருவருமே தலா 146 பந்துகள் பேட்டிங் ஆடினர்.  

அதன்பின்னர் களத்திற்கு வந்த நிதிஷ் ராணாவும் கேப்டன் துருவ் ஷோரேவும் இணைந்து அதிரடியாக ஆடி வெறித்தனமாக இலக்கை விரட்டினர். போட்டியை டிரா செய்யும் மனநிலையுடன் அவர்கள் அணுகவில்லை. இலக்கை விரட்டி வெற்றி பெறும் முனைப்பில் அடித்து ஆடினர். ஷோரே 48 பந்தில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ராணா, அதன்பின்னரும் தனது அதிரடியை தொடர்ந்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ராணா, மிகக்குறைந்த பந்தில் சதமடித்தார். ராணாவின் அதிரடியால் இலக்கு டெல்லி அணிக்கு எளிதானது. 

68 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 108 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று டெல்லி அணியை வெற்றி பெற செய்தார். 73வது ஓவரில் 347 ரன்கள் என்ற இலக்கை எட்டி டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.