மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் 2025ல் சிறப்பாக செயல்பட்ட பூரன், சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியிருந்தார்.
Nicholas Pooran Retirement: மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை, வெளியான அவரது முடிவு கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தனது சமூக வலைத்தள பக்கங்களில் ரசிகர்களுடன் ஓய்வு முடிவைப் பகிர்ந்துகொண்ட பூரன், இது மிகவும் கடினமான முடிவு என்றும் கூறியுள்ளார்.
61 டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் 106 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 4,000 ரன்களுக்கு மேல் குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறார் பூரன்.
2025 ஐபிஎல் தொடரில் ரன்குவிப்பு:
ரிஷப் பந்தின் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக 2025 ஐபிஎல் (IPL) தொடரில் சிறப்பாக விளையாடிய பூரன், 14 போட்டிகளில் சுமார் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 524 ரன்கள் குவித்தார். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த தொடரில் பங்கேற்பதில் இருந்து ஓய்வு கேட்ட பூரன், அடுத்த சில நாட்களில் இந்த ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
"நிறைய யோசித்த பிறகு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க முடிவு செய்துள்ளேன்," என்று Nicholas Pooran தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
முன்னர் மேற்கிந்திய தீவுகள் டி20 அணிக்கு கேப்டனாக இருந்தவர் Nicholas Pooran. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் ஓய்வு பெற்றுள்ளார்.
Nicholas Pooran Retirement அறிவிப்பு:
“இந்த விளையாட்டு நிறைய கொடுத்திருக்கிறது, இன்னும் கொடுக்கும்” என்று தெரிவித்துள்ள பூரன், “மேற்கிந்திய தீவுகளின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு, அந்த மெரூன் சீருடையை அணிவது, தேசிய கீதத்திற்காக நிற்பது, களத்தில் இறங்கும் ஒவ்வொரு முறையும் என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுப்பது... உண்மையில் அவை எனக்கு என்ன அர்த்தம் கொடுத்தன என்பதை வார்த்தைகளில் சொல்ல கடினமாக உள்ளது. அணியின் கேப்டனாக வழிநடத்தியது என் இதயத்திற்கு நெருக்கமானது.” என Nicholas Pooran தனது பதிவில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
"ரசிகர்களின் மாறாத அன்புக்கு நன்றி. கடினமான தருணங்களில் நீங்கள் என்னை உயர்த்தினீர்கள், நல்ல தருணங்களை கொண்டாடினீர்கள். இந்த பயணத்தில் என்னுடன் வந்த என் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அணியினருக்கும் நன்றி. உங்கள் நம்பிக்கையும் ஆதரவும் அனைத்தையும் கடந்து பயணிக்க வைத்தது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Nicholas Pooran கிரிக்கெட் உலகப் பயணம்:
Nicholas Pooran 2016 இல் சர்வதேச அரங்கில் அறிமுகமானார். கடைசியாக ஜூலை 2023 இல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடினார். கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற அவர், மூத்த தேசிய அணிக்காக தனது சமீபத்திய டி20 சர்வதேச போட்டியில் டிசம்பர் 2024 இல் விளையாடினார். 2021 முதல் 2022 வரையிலும் பின் 2023 ஆம் ஆண்டிலும் டி20 போட்டிகளில் மேற்கிந்திய தீவுகளுக்கு கேப்டனாக இருந்தார்.
நிக்கோலஸ் பூரன் இப்போது முழுமையாக டி20 உலகில் அடியெடுத்து வைக்கிறார். அதிரடி இடது கை பேட்ஸ்மேனான பூரன் உலகெங்கிலும் உள்ள டி20 லீக் போட்ட்களில் தொடர்ந்து விளையாடுவார். ஐபிஎல் 2025 இல் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் ஒருவராக இருந்தார். லக்னோ அணியால் 21 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டார்.
அவரது ஓய்வு சர்வதேச கிரிக்கெட்டில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் கவலைக்குரிய போக்கை எடுத்துக்காட்டுகிறது. அங்கு பல திறமையான வீரர்கள் தேசிய அணிக்காக விளையாடுவதை விட டி20 லீக் போட்டிகளில் ஆடுவதே லாபகரமானது என முடிவெடுக்கிறார்கள். குறிப்பாக, 2024 இல் அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் பல முன்னணி வீரர்களுக்கு பல வருட ஒப்பந்தங்களை வழங்கியபோது, நிக்கோலஸ் பூரனுக்கு அந்த ஒப்பந்தம் வழங்கப்படவில்லை.
சமீபத்தில் தான், தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் ஹென்ரிச் கிளாசெனும் தனது 33 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.