Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ அறிமுக போட்டியில் அசத்தலாக பந்துவீசிய ஹர்ஷல் படேல்..! இந்தியாவிற்கு எளிய இலக்கை நிர்ணயித்த நியூசி.,

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி, 20 ஓவரில் 153 ரன்கள் மட்டுமே அடித்து 154 ரன்கள் என்ற  எளிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

new zealand set easy target to india in second t20
Author
Ranchi, First Published Nov 19, 2021, 9:14 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று ராஞ்சியில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் ஆடிவருகின்றன.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த போட்டியில் இடது கையில் காயமடைந்த ஃபாஸ்ட் பவுலர் முகமது சிராஜுக்கு பதிலாக ஹர்ஷல் படேல் இந்திய அணியில் அறிமுகமானார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல்.

நியூசிலாந்து அணி 3 மாற்றங்களுடன் களமிறங்கியது. ராச்சின் ரவீந்திராவுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் சேர்க்கப்பட்டார். ஸ்பின்னர் டாட் ஆஸ்டிலுக்கு பதிலாக இஷ் சோதியும், லாக்கி ஃபெர்குசனுக்கு பதிலாக ஆடம் மில்னேவும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் ஃபிலிப்ஸ், டிம் சேஃபெர்ட் (விக்கெட் கீப்பர்), ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி (கேப்டன்), இஷ் சோதி, ஆடம் மில்னே, டிரெண்ட் போல்ட்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் மார்டின் கப்டில் மற்றும் டேரைல் மிட்செல் ஆகிய இருவரும் அதிரடியாக தொடங்கினர். பனிப்பொழிவு அதிகம் இருந்ததால், 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடுவது எளிதாக இருக்கும். அதனால் கூடுதலாக 20 ரன்களாவது தேவை என்பதை உணர்ந்து கப்டில் காட்டடி அடித்தார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அதிரடியாக தொடங்கினார். அவருடன் இணைந்து மிட்செலும் அதிரடியாக ஆடினார்.

4.1 ஓவரிலேயே 48 ரன்களை நியூசிலாந்து அணி அடித்துவிட்ட நிலையில், அதற்கு காரணமான மார்டின் கப்டில், 15 பந்தில் 31 ரன்கள் அடித்து தீபக் சாஹரின் பந்தில் ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய மார்க் சாப்மேன் 21 ரன்னில் அக்ஸர் படேலின் சுழலில் வீழ்ந்தார். டேரைல் மிட்செலும் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். அக்ஸர் படேலும் அஷ்வினும் இணைந்து மிடில் ஓவர்களில் அருமையாக பந்துவீசி ஸ்கோரை கட்டுப்படுத்த, ரன் வராத அழுத்தத்தில் நியூசிலாந்து வீரர்கள் விக்கெட்டை விட்டனர்.

டிம் சேஃபெர்ட் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். அடித்து ஆடிய க்ளென் ஃபிலிப்ஸ் 21 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 34 ரன்களுக்கு ஹர்ஷல் படேலின் பந்தில் ஆட்டமிழந்தார்.  டேரைல் மிட்செல் மற்றும் ஃபிலிப்ஸ் ஆகிய 2 முக்கியமான வீரர்களையும் அறிமுக பவுலர் ஹர்ஷல் படேல் வீழ்த்தினார்.

அறிமுக போட்டியிலேயே அருமையாக வீசிய ஹர்ஷல் படேல், 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.  பொதுவாக அடித்து ஆடக்கூடிய ஜிம்மி நீஷம், இந்த இன்னிங்ஸில் பெரிய ஷாட் கனெக்ட் ஆகாமல் படுமோசமாக திணறினார். 12 பந்தில் வெறும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி 5 ஓவரில் நியூசிலாந்து அணிக்கு வெறும் 28 ரன்கள் மட்டுமே கிடைக்க, 20 ஓவரில் 153 ரன்கள் மட்டுமே அடித்தது அந்த அணி.

154 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணி விரட்டிவருகிறது. முதல் இன்னிங்ஸிலேயே பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில், 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவால் பந்துவீசுவது கடினமாக இருக்கும் என்பதால், இந்திய அணிக்கு இலக்கை விரட்டுவது எளிதாக இருக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios