நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ சதம்; நியூசிலாந்திற்கு 332 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த வங்கதேசம்!
நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணியானது முதலில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில், நியூசிலாந்து 2-0 என்று ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 310 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து 317 ரன்கள் எடுத்தது. இதில், கேன் வில்லியம்சன் 104 ரன்கள் எடுத்தார். பின்னர், 7 ரன்கள் பின் தங்கிய நிலையில், வங்கதேச அணி 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. இதில் கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ நிதானமாக விளையாடி சதம் அடித்தாவர். அவர் 198 பந்துகளில் 10 பவுண்டரி உள்பட 105 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
முதல் முறையாக டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற உகாண்டா – தொடரில் பங்கேற்கும் 20 அணிகளின் லிஸ்ட்!
முஷ்பிகுர் ரஹீம் பொறுமையாக விளையாடி 67 ரன்கள் சேர்த்தார். மெஹிடி ஹசன் மிராஸ் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக, வங்கதேச அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக நியூசிலாந்து அணிக்கு 332 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, 332 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட நியூசிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸ் விளையாடி வருகிறது. தற்போது வரையில் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 43 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற 289 ரன்கள் தேவை. வங்கதேச அணி வெற்றி பெற 7 விக்கெட்டுகள் கைப்பற்ற வேண்டும்.