இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என இங்கிலாந்து அணி வென்ற நிலையில், டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. 

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை குவித்தது.
 
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ராவலும் லேதமும் ஏமாற்றமளித்தனர். இருவரும் சொற்ப ரன்களில ஆட்டமிழந்தனர். அரைசதம் அடித்த கேப்டன் கேன் வில்லியம்சன் 51 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ரோஸ் டெய்லர் 25 ரன்களிலும் ஹென்ரி நிகோல்ஸ் 41 ரன்களிலும் என முக்கியமான வீரர்கள் யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் அவுட்டாகி வெளியேறினர்.

பின்னர் வாட்லிங்கும் கோலின் டி கிராண்ட் ஹோமும் இணைந்து சிறப்பாக ஆடினர். ஆறாவது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 119 ரன்களை சேர்த்தனர். டி கிராண்ட் ஹோம் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய வாட்லிங் சதத்தை கடந்தார். 

டி கிராண்ட் ஹோமின் விக்கெட்டுக்கு பிறகு வாட்லிங்குடன் ஜோடி சேர்ந்த மிட்செல் சாண்ட்னெரும் சிறப்பாக ஆடினார். வாட்லிங் - சாண்ட்னெர் ஜோடியை இங்கிலாந்து பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்தினார். சாண்ட்னெரும் சதமடிக்க, வாட்லிங் தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். 

வாட்லிங் - சாண்ட்னெர் ஜோடி, ஏழாவது விக்கெட்டுக்கு 261 ரன்களை குவித்தது. இந்த ஜோடியின் அபாரமான பேட்டிங்கால் நியூசிலாந்து அணி மெகா ஸ்கோரை அடித்தது. முதல் இன்னிங்ஸை 615 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி. 

262 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி இங்கிலாந்து அணி ஆடிவருகிறது. நான்காம் நாள் ஆட்டம் முடிவடையவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால் மிகவும் நிதானமாக ஆடினர். ஆனாலும் தொடக்க வீரர் டோமினிக் சிப்லியை சாண்ட்னெர் வீழ்த்திவிட்டார். 

இந்த போட்டியில் ஜெயிக்க வேண்டுமானால் நியூசிலாந்து அணி, 262 ரன்களுக்குள்ளாக அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும். அப்படி வீழ்த்தினால் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும். ஒருவேளை 262 ரன்களுக்கு மேல் இங்கிலாந்து அடித்தாலும் கூட, பெரியளவில் அந்த அணியால் முன்னிலை பெற முடியாது என்பதால், எஞ்சிய இலக்கை நியூசிலாந்தால் அடித்துவிட முடியும். ஆகமொத்தத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற வேண்டுமானால், இங்கிலாந்தை ஆல் அவுட் செய்யவேண்டும். இல்லையெனில் போட்டி டிராவில் முடிந்துவிடும். இங்கிலாந்து அணிக்கு இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு இல்லையென்பதால், போட்டியை டிரா செய்யவே அந்த அணி முயலும்.