வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது.. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஹாமில்டனில் நடந்த முதல் போட்டியில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் இரட்டை சதத்தால் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 134 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், வெலிங்டனில் நடந்த 2வது டெஸ்ட்டிலும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது நியூசிலாந்து அணி.

2வது டெஸ்ட்டில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடாததால், டாம் லேதம் கேப்டனாக செயல்பட்டார். டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, நியூசிலாந்தை பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் ஹென்ரி நிகோல்ஸ் மட்டுமே பெரிய இன்னிங்ஸ் ஆடினார். அவரைத்தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை; அரைசதம் கூட அடிக்கவில்லை. டாம் லேதம், டாம் பிளண்டல், ரோஸ் டெய்லர் என யாருமே சோபிக்கவில்லை. ஆனால் பொறுப்புடனும் தெளிவாகவும் ஆடிய ஹென்ரி நிகோல்ஸ், சதமடித்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய மறுமுனையில் நிலைத்து ஆடிய ஹென்ரி நிகோல்ஸ், 280 பந்தில் 174 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 26 ரன்களில் இரட்டை சதத்தை தவறவிட்டு நியூசிலாந்து அணியின் 9வது விக்கெட்டாக நிகோல்ஸ் ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட்டிங் ஆடிய ஃபாஸ்ட் பவுலர் நீல் வாக்னர் 42 பந்தில் 66 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணி பெரிய ஸ்கோரை அடிக்க உதவினார்.

நிகோல்ஸின் சதம் மற்றும் வாக்னரின் கடைசி நேர அதிரடி அரைசதத்தால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 460 ரன்களை குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பிளாக்வுட் மட்டுமே அரைசதம்(69) அடித்தார்.  காம்ப்பெல் மற்றும் ப்ரூக்ஸ் ஆகிய இருவரும் தட்டுத்தடுமாறி இரட்டை இலக்கத்தை எட்டி தலா 14 ரன்கள் அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, முதல் இன்னிங்ஸில் 131 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி, ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணியில் அபாரமாக பந்துவீசிய டிம் சௌதி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள், இந்த இன்னிங்ஸிலும் அடுத்தடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். தொடக்க வீரர் பிராத்வெயிட் 24 ரன்களுக்கும் டேரன் பிராவோ 4 ரன்களுக்கும், ப்ரூக்ஸ் 36 ரன்களுக்கும் நடையை கட்ட, தொடக்க வீரர் காம்ப்பெல் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 170 ரன்களுக்கே வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் கேப்டன் ஜேசன் ஹோல்டரும் ஜோஷுவா டி சில்வாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர்.

நேற்றைய 3ம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் அடித்திருந்தது. அரைசதம் அடித்த ஜேசன் ஹோல்டர் 60 ரன்களுடனும் ஜோஷுவா டி சில்வா 25 ரன்களுடனும் களத்தில் இருந்த நிலையில், நியூசிலாந்தை விட, 85 ரன்கள் பின் தங்கிய நிலையில், 4ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்று களத்திற்கு வந்ததுமே, வெறும் ஒரு ரன் மட்டுமே அடித்து 61 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் எஞ்சிய 3 விக்கெட்டுகளும் அடுத்தடுத்து விழ, 317 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் அவுட்டாக, 2வது டெஸ்ட்டிலும் இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.