ஃபின் ஆலன் MLC போட்டியில் 19 சிக்ஸர்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். 51 பந்துகளில் 151 ரன்கள் குவித்த அவர், கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார். ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஆலன், தனது திறமையை உலகிற்கு நிரூபித்துள்ளார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன், அமெரிக்காவில் நடக்கும் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) தொடரின் முதல் போட்டியில் சிக்ஸர் அடிப்பதில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடிய ஆலன், வெள்ளிக்கிழமை ஓக்லாந்து கொலிசியத்தில் நடந்த போட்டியில் வாஷிங்டன் ஃபிரீடம் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து, கிறிஸ் கெய்லின் நீண்ட கால டி20 சிக்ஸர் சாதனையை முறியடித்துள்ளார்.

ஆலன் வெறும் 51 பந்துகளில் அதிரடியாக 151 ரன்கள் குவித்தார். இதில் 19 சிக்ஸர்கள் அடங்கும். அவரது இந்த ஆட்டம் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியதுடன், டி20 கிரிக்கெட் சாதனைகளையும் மாற்றி எழுதியது. வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் (2017), எஸ்டோனியாவின் சஹில் சவுகான் (2024) ஆகியோர் ஒரே ஆட்டத்தில் 18 சிக்ஸர்கள் அடித்த முந்தைய சாதனையை முறியடித்தார். இதன் மூலம் ஆண்கள் டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் நொறுக்கிய புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

Scroll to load tweet…

டிம் செய்பர்ட்டுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆலன், முதல் ஆறு ஓவர்களுக்குள்ளேயே ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்டு, 14 பந்துகளில் 40 ரன்களை எடுத்திருந்தார். 26 வயதான ஆலன் தனது அரை சதத்தை வெறும் 20 பந்துகளில் எட்டினார். பின்னர் மேலும் வேகமெடுத்து, தனது நான்காவது டி20 சதத்தை வெறும் 34 பந்துகளில் அடித்தார். இது எம்.எல்.சி. டி20 வரலாற்றில் அதிவேக சதம் ஆகும். இதன் மூலம் கடந்த சீசனில் 40 பந்துகளில் சதம் அடித்த நிக்கோலஸ் பூரனின் சாதனையை முறியடித்திருக்கிறார்.

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஃபின் ஆலன்:

ஐபிஎல் 2021 இல் ஜோஷ் பிலிப்பிற்குப் பதிலாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட பின் ஆலன், அந்த ஆண்டு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. அடுத்த ஆண்டு ஏலத்தில் அவர், எந்த அணியாலும் எடுக்கப்படவில்லை. கடந்த டிசம்பரில் நடந்த மெகா ஏலத்தில், தனது அடிப்படை விலையை ரூ.2 கோடியாக நிர்ணயித்த போதிலும், விலைபோகாமல் இருந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தனது உண்மையான திறனை உலகிற்கு காட்டி இருக்கிறார். 150 ரன்களை வெறும் 49 பந்துகளில் எட்டினார். இது அனைத்து டி20 கிரிக்கெட்டிலும் அதிவேக 150 ரன் ஆகும். ஐபிஎல் போட்டியில் கெய்ல் 175* ரன்களை எடுத்தபோது 50 பந்துகளில் 150 ரன்களை எட்டிய சாதனையையும் பின் ஆலன் முந்தியிருக்கிறார்.

பவுலர்களைப் பதம்பார்த்த ஃபின் ஆலன்:

ஆலனின் அதிரடி ஆட்டத்தால், சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் குவித்தது. இது அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட மிக உயர்ந்த டி20 ஸ்கோர் ஆகும். இது முந்தைய எம்எல்சி மற்றும் அமெரிக்க டி20 கிரிக்கெட் சாதனைகளை முறியடித்தது.

தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் உலக கிரிக்கெட்டில் மிகவும் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் பின் ஆலன். அவர் இப்போது 173.27 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 4,100 டி20 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 1,000 ரன்களுக்கு மேல் எடுத்த டி20 பேட்ஸ்மேன்களில் மிக உயர்ந்த ஸ்ட்ரைக் ரேட் வைத்திருப்பவரும் இவர்தான்.

ஏற்கெனவே ஜனவரி 2024 இல் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் 62 பந்துகளில் 137 ரன்கள் எடுத்திருக்கிறார். அப்போது அவர் 16 சிக்ஸர்களை அடித்திருந்தார்.