இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-2 என இங்கிலாந்து அணி வென்றது. இதையடுத்து டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மாங்கனியில் நடந்தது. 

அந்த போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி வாட்லிங்கின் இரட்டை சதம், சாண்ட்னெரின் அருமையான சதம் மற்றும் கிராண்ட் ஹோமின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 615 ரன்கள் அடித்தது. 

262 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 197 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியின்போது, இங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சரை அவரது நிறத்தை குறிப்பிட்டு இன ரீதியாக ரசிகர் கிண்டல் செய்துள்ளார். அதுகுறித்த தனது வேதனையை ஜோஃப்ரா ஆர்ச்சரி டுவிட்டரில் தெரிவித்திருந்தார். 

ஜோஃப்ரா ஆர்ச்சர் இனரீதியாக விமர்சிக்கப்பட்டதாக, அவர் கூறிய புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு அந்த நபர் யார் என்பது கண்டறியப்படும் என்று நியூசிலாந்து போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் இனரீதியாக விமர்சிக்கப்பட்டதற்கு, அவரிடம் நியூசிலாந்து அணியின் சார்பில் கேப்டன் வில்லியம்சன் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுமாதிரியான இழிசெயல்கள் நியூசிலாந்து நாட்டுக்காரர்களின் செயல்கள் அல்ல என்று இனரீதியாக பேசியவரை கண்டிக்கும் வகையில் பேசியுள்ள வில்லியம்சன், தன் நாட்டு ரசிகர்கள் மீது உள்ள நம்பிக்கையில், இனிமேல் இதுபோன்று நடக்காது என்று உறுதியும் அளித்துள்ளார்.