கம்பீர் மீது வக்கிரத்தை கக்கிய ஷாஹித் அஃப்ரிடி! பதிலடி கொடுக்காமல் சிரித்த ஹர்பஜன் சிங்.. ரசிகர்கள் கடுங்கோபம்
கௌதம் கம்பீருடனான பழைய பகையை மனதில் வைத்து அவரை அடிக்கடி சீண்டிவரும் ஷாஹித் அஃப்ரிடி, இப்போதும் அதேபோன்று கம்பீரை மட்டம்தட்டி பேசியிருக்கிறார். அவரது பேச்சை கேட்டு ஹர்பஜன் சிங் சிரித்ததுதான் ரசிகர்களுக்கு பெரும் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றி வேட்கையுடன் கடுமையாக போராடுவார்கள். அந்த வெற்றி வேட்கை களத்தில் இரு அணி வீரர்களிடமும் அப்பட்டமாக தெரியும். அந்த வேட்கையே இரு தரப்பினருக்கும் இடையேயான மோதலுக்கும் வழிவகுக்கும்.
இந்தியா - பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே களத்தில் சில மோதல்களும், ஸ்லெட்ஜிங்களும், அதற்கான பதிலடிகளும் என ரணகளமாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் கடந்து இந்தியா - பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே நல்ல நட்பும் உறவும் கூட இருந்திருக்கிறது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்..! கடைசி நேரத்தில் கழட்டிவிடப்படும் சீனியர் வீரர்
எல்லா காலக்கட்டத்திலும் இந்தியா - பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே மோதல், நட்பு என இரண்டுமே இருந்திருக்கிறது. இப்போதைய சூழலில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் நெருங்கி பழகுவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில், தான் ஆடிய காலக்கட்டத்தில் கம்பீருடனான மோதலை மனதில் வைத்து இன்னும் அவரை சீண்டிக்கொண்டிருக்கிறார் ஷாஹித் அஃப்ரிடி.
2007ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே கான்பூரில் நடந்த ஒருநாள் போட்டியின் போது கம்பீர் - அஃப்ரிடி இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் அத்துடன் முடிந்துவிட்டது. ஆனால் அஃப்ரிடி பொதுவாகவே இந்தியாவை அவ்வப்போது சீண்டுவார். காஷ்மீர் விவகாரத்திலும் தேவையில்லாமல் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறுவார். அப்போதெல்லாம் அஃப்ரிடிக்கு தக்க பதிலடி கொடுத்து அவரது மூக்கை உடைப்பது கம்பீர் தான்.
அதனால் கடந்த சில ஆண்டுகளில் அஃப்ரிடி - கம்பீர் இடையே கடும் வாக்குவாதங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. இவர் கம்பீரை வம்புக்கு இழுப்பார். அவருக்கு பதிலடி கொடுத்தால் கம்பீர் மோசமானவர் என்பதை போல சித்தரிப்பார். ஆனால் கம்பீரோ, அஃப்ரிடியை தேவையில்லாமல் சீண்டமாட்டார். தன்னை வம்பு இழுக்கும் அஃப்ரிடிக்கு பதிலடி மட்டுமே கொடுப்பார்.
இதையும் படிங்க - ஆசிய கோப்பை: ஜடேஜா - ஹர்திக் பாண்டியா பொறுப்பான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இந்நிலையில், கம்பீரை மீண்டும் வம்பு இழுத்துள்ளார் அஃப்ரிடி. ”சில நேரங்களில் கௌதம் கம்பீருடன் சில வாக்குவாதங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் கம்பீர் எப்படிப்பட்ட நபர் என்றால், இந்திய அணியிலேயே அவரை பலருக்கு பிடிக்காது” என்று கூறினார் அஃப்ரிடி.
அதைக்கேட்டு ஹர்பஜன் சிங் சிரித்தார். தனது சக வீரரான கம்பீரை பற்றி அஃப்ரிடி தரமில்லாமல் பேசியதை கேட்டு ஹர்பஜன் சிங் சிரித்ததை நெட்டிசன்களும் ரசிகர்களும் ரசிக்கவில்லை. அஃப்ரிடிக்கு பதிலடி கொடுக்காமல் எப்படி சிரிக்கலாம் என்று ஹர்பஜன் சிங்கை விளாசிவருகின்றனர். கௌதம் கம்பீர் இந்தியாவின் ஹீரோ என்று அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருகின்றனர்.