நேபாளம், ஜிம்பாப்வே மற்றும் சிங்கப்பூர் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் சிங்கப்பூரில் நடந்துவருகிறது. 

இதில் நேபாளம் மற்றும் சிங்கப்பூர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிய சிங்கப்பூர் அணியின் கேப்டன் டிம் டேவிட், அபாரமாக ஆடி அரைசதம் அடித்து 64 ரன்களை குவிக்க, அந்த அணி 20 ஓவரில் 151 ரன்கள் அடித்தது. 

152 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நேபாள அணியின் தொடக்க வீரர் இஷான் பாண்டே 5 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான பராஸ் கட்கா மற்றும் ஆரிஃப் ஷேக் ஆகிய இருவரும் இணைந்து போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தனர். 

பராஸ் கட்கா அதிரடியாக ஆடி ரன்களை குவிக்க, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆரிஃப் ஆடினார். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய கட்கா சதமடித்தார். 52 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 106 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆரிஃப் 39 ரன்கள் அடித்தார். நேபாள கேப்டனின் அதிரடியான பேட்டிங்கால் அந்த அணி 16வது ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சேஸிங்கில் சதமடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை பராஸ் கட்கா படைத்துள்ளார்.