இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருப்பதால், தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி கட்டாக்கில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

காயம் காரணமாக தீபக் சாஹர் அணியிலிருந்து விலகியதால், அவருக்கு பதிலாக அணியில் இணைந்துள்ள இளம் ஃபாஸ்ட் பவுலரான நவ்தீப் சைனிதான் இந்த போட்டியில் ஆடுவார் என்றும் அதைத்தவிர அணியில் வேறு எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை; இந்த ஒரு மாற்றத்தைத் தவிர இரண்டாவது போட்டியில் அதே அணியுடன் தான் இந்திய அணி கடைசி போட்டியிலும் களமிறங்கும் என்று நமது ஏசியாநெட் தமிழ் தளத்தில் பதிவிட்டிருந்தோம்.கடைசி ஒருநாள் போட்டிக்கான அணியில் ஒரேயொரு கட்டாய மாற்றம்.. உத்தேச இந்திய அணி

அதேபோலவே கடைசி போட்டியில் தீபக் சாஹருக்கு பதிலாக நவ்தீப் சைனி என்ற மாற்றத்தைத் தவிர வேறு எந்த மாற்றமும் அணியில் செய்யப்படவில்லை. நவ்தீப் சைனிக்கு இதுதான் அறிமுக ஒருநாள் போட்டி. முதல் போட்டியிலேயே அனைவரையும் மிரட்டும் வகையில் ஏதேனும் செய்கிறாரா என்பதை பார்ப்போம். அந்தளவிற்கு திறமையான பவுலர் தான் சைனி. 

வெஸ்ட் இண்டீஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரண்டாவது போட்டியில் ஆடிய அதே அணிதான் இந்த போட்டியிலும் ஆடுகிறது. தொடரை தீர்மானிக்கும் போட்டி என்பதால் இரு அணிகளுமே வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளன. 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, ஷமி.

வெஸ்ட் இண்டீஸ் அணி:

எவின் லூயிஸ், ஷாய் ஹோப்(விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், நிகோலஸ் பூரான், ரோஸ்டான் சேஸ், பொல்லார்டு(கேப்டன்), ஜேசன் ஹோல்டர், கீமோ பால், அல்ஸாரி ஜோசப், பியாரே, ஷெல்டான் கோட்ரெல்.