ஆஸ்திரேலிய அணியின் மிகச்சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர் நாதன் லயன். கடந்த 2011ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து ஆடிவருகிறார். 

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நட்சத்திர பவுலராக திகழ்கிறார். ஆஃப் ஸ்பின்னரான நாதன் லயன், தனது சுழற்பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்து விக்கெட்டுகளை வீழ்த்துபவர். கடந்த ஆண்டின் இறுதியில் இந்திய அணிக்கு எதிரான தொடரில் அபாரமாக வீசினார் நாதன் லயன். 

ஆஸ்திரேலிய அணிக்காக 25 ஒருநாள் போட்டிகளிலும் 86 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ளார் நாதன் லயன். உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் கூட நாதன் லயன் இடம்பிடித்துள்ளார். 

இந்நிலையில், தான் பந்துவீசியதிலேயே எந்த பேட்ஸ்மேனுக்கு வீசியது மிகக்கடினமாக இருந்தது என்ற கேள்விக்கு ஏபி டிவில்லியர்ஸ் என்று பதிலளித்துள்ளார் லயன். இதுகுறித்து பேசிய நாதன் லயன், நான் பந்துவீசியதிலேயே ஏபி டிவில்லியர்ஸுக்கு வீசுவதுதான் கடினமாக இருந்தது. அவர் நினைக்கும்போதெல்லாம் எனது பந்தை மைதானத்தின் எல்லா திசைகளிலும் அடித்து நொறுக்கினார். ஆனால் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிரான இதுபோன்ற சவால்களை எதிர்கொள்வது எனக்கு பிடிக்கும் என்று நாதன் லயன் தெரிவித்துள்ளார்.