சர்வதேச கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலுமே சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை கொண்ட அணி பாகிஸ்தான். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷோயப் அக்தர், முகமது சமி, முகமது அமீர், ஜுனைத் கான் என அந்தந்த காலக்கட்டத்தில் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களை தன்னகத்தே கொண்டிருந்தது பாகிஸ்தான்.

அந்தவகையில், தற்போதைய ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டும் மிரட்டலாக உள்ளது. ஷாஹீன் அஃப்ரிடி - நசீம் ஷா ஜோடி, பாகிஸ்தானின் அடுத்த வாசிம் அக்ரம் - வக்கார் யூனிஸ் ஜோடியாக பார்க்கப்படுகிறது. அந்தளவிற்கு இளம் ஃபாஸ்ட் பவுலர்கள் இருவரும் அசத்திவருகின்றனர். 

இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியிலும் இருவரும் அபாரமாக வீசினர். மான்செஸ்டரில் நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை அடித்தது. ஆனால் இங்கிலாந்து அணியை வெறும் 217 ரன்களுக்கு சுருட்டி, 109 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது பாகிஸ்தான். 

இந்த போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸுக்கு நசீம் ஷா வீசிய பவுன்ஸர் அவரது மண்டையை பதம் பார்த்தது. நசீம் ஷா வீசிய ஷார்ட் பிட்ச் பந்தின் லெந்த்தை தவறாக கணித்த கிறிஸ் வோக்ஸ் குனிய, பந்து அவர் எதிர்பார்த்த அளவிற்கு பவுன்ஸ் ஆகாததால் அவரது ஹெல்மெட்டை தாக்கியது. ஹெல்மெட் விரிசல் விட்டதால் மாற்றப்பட்டது. உடனடியாக ஃபிசியோ மைதானத்திற்கு வந்து கிறிஸ் வோக்ஸை பரிசோதித்தார். வோக்ஸுக்கு எந்த பிரச்னையும் இல்லையென்பதால் தொடர்ந்து ஆடினார். ஆனாலும் 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த பவுன்ஸர் வீடியோ இதோ..