ஆசிய கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 6 சிக்ஸர்களை விளாசிய நஜிபுல்லா ஜட்ரான், அபார சாதனை படைத்துள்ளார். 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 2 அணிகளையுமே வீழ்த்தி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

வங்கதேசம் - ஆஃப்கானிஸ்தான் இடையே ஷார்ஜாவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் அணி 20 ஓவரில் 127 ரன்கள் மட்டுமே அடித்தது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷீத் கான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையும் படிங்க - சூர்யகுமார் யாதவுக்கு முன் என்னை பேட்டிங் ஆட இறக்கிவிட்டதற்கு இதுதான் காரணம்..! ஜடேஜா விளக்கம்

128 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணியை தொடக்கம் முதலே எளிதாக ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தினர் வங்கதேச பவுலர்கள். 13 ஓவரின் கடைசி பந்தில் முகமது நபியின் விக்கெட்டை 3வது விக்கெட்டாக இழக்கும்போது ஆஃப்கான் அணியின் ஸ்கோர் வெறும் 62 ரன்கள் தான். அதன்பின்னர் களத்திற்கு வந்த நஜிபுல்லா ஜட்ரான், 17 பந்தில் 6 சிக்ஸர்களை விளாசி 43 ரன்களை வேகமாக அடித்து 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டி ஆஃப்கானிஸ்தான் அணியை வெற்றி பெற செய்தார்.

16வது ஓவரில் ஒரு சிக்ஸர், 17வது ஓவரில் 2 சிக்ஸர், 18வது ஓவரில் 2 சிக்ஸர், 19வது ஓவரில் ஒரு சிக்ஸர் என டெத் ஓவர்களில் மொத்தம் 6 சிக்ஸர்களை விளாசினார் நஜிபுல்லா ஜட்ரான். 

இதன்மூலம், இலக்கை விரட்டும்போது டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நஜிபுல்லா ஜட்ரான் படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 2வது பேட்டிங்கில் இலக்கை விரட்டும்போது டெத் ஓவர்களில் மொத்தம் 18 சிக்ஸர்களை விளாசியுள்ளார் நஜிபுல்லா ஜட்ரான். இதன்மூலம் ஏற்கனவே 17 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மோர்கன் மற்றும் இலங்கையின் திசாரா பெரேரா ஆகிய இருவரது சாதனையையும் முறியடித்துள்ளார் நஜிபுல்லா ஜட்ரான்.

இதையும் படிங்க - Asia Cup 2022: பாண்டியா பட்டைய கெளப்பிட்டாப்ள..! பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் புகழாரம்

மேலும் டி20 கிரிக்கெட்டில் டெத் ஓவர்களில் 50 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் நஜிபுல்லா ஜட்ரான் படைத்துள்ளார். நஜிபுல்லா ஜட்ரான் டெத் ஓவர்களில் 53 சிக்ஸர்களை அடித்துள்ளார். டேவிட் மில்லர் 47 சிக்ஸர்களுடன் 2ம் இடத்தில் உள்ளார்.