ஒரு ஓவரில் 29 ரன்கள் விளாசிய தமிழக வீரர் ஜெகதீசன்! வைரல் வீடியோ!
N Jagadeeshan 29 runs in an over: தமிழ்நாடு 268 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆடிய நிலையில், தொடக்க வீரர் ஜெகதீசன் ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அமன் சிங் ஷேகாவத் வீசிய ஒரே ஓவரில் 29 ரன்கள் விளாசினார்.
விஜய் ஹசாரே டிராபி தொடரில் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெகதீசன் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். வியாழக்கிழமை, வதோதராவில் உள்ள கோடம்பி மைதானத்தில் அந்தப் போட்டி நடைபெற்றது.
268 ரன்களை சேஸ் செய்த தமிழ்நாடு அணிக்கு ஜெகதீசன் ஒரு அற்புதமான தொடக்கத்தை அளித்தார். தமிழ்நாட்டின் பேட்டிங்கின் இரண்டாவது ஓவரில், 29 வயதான ஜெகதீசன் ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அமன் சிங் ஷேகாவத் வீசிய ஒரு ஓவரில் 29 ரன்கள் அடித்து நொறுக்கினார். இரண்டாவது ஓவரின் முதல் பந்து ஒரு வைட் பவுண்டரியுடன் தொடங்கிய பிறகு, ஜெகதீசன் தொடர்ந்து ஆறு பவுண்டரிகளை அடித்தார்.
இரண்டாவது ஓவரின் முடிவில், தமிழ்நாடு அணியின் ஸ்கோர் 44/0 ஆக இருந்தது. விரைவில், தமிழ்நாடு தொடக்க ஆட்டக்காரர் 33 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் 52 பந்துகளில் 65 ரன்கள் அடித்து குக்னா அஜய் சிங் பந்துவீச்சில் அவுட்டானார். அவரது அற்புதமான இன்னிங்ஸில் 10 பவுண்டரிகளை அடித்திருந்தார்.
பட்டாசாக நாலாபுறமும் பந்துகளை விரட்டிய ஜெகதீசனின் பேட்டிங் வீடியோவை பிசிசிஐ தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பார்வையிடப்பட்டு வைரலாகியுள்ளது.
ஆனால், ஜெகதீசனின் அதிரடி ஆட்டம் வீணானது. தமிழ்நாடு 47.1 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தானிடம் வெற்றியைப் பறிகொடுத்ததால் காலிறுதிக்குச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்துவிட்டது. ஜெகதீசன் ஆட்டமிழப்பதற்கு முன்பு இந்திய அணியின் ஸ்கோர் 107/3 எனும் நிலையில் இருந்தது. பிறகு வந்த வீரர்கள் விஜய் சங்கர் (49), பாபா இந்திரஜித் (37), முகமது அலி (34) ஆகியோர் போராடி ரன் சேர்த்தனர்.
இருப்பினும், அவர்களின் முயற்சிகள் தமிழ்நாடு அணியின் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. பின்வரிசை வீரர்கள் ராஜஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீக்கிரம் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். அமன் சிங் ஷேகாவத், அனிகேத் சவுத்ரி, குக்னா அஜய் சிங் ஆகிய ராஜஸ்தான் வீரர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 19 ரன்கள் வித்தியாசத்தில் தங்கள் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
ராஜஸ்தானின் பேட்டிங்கில், அபிஜித் தோமர் 125 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். மஹிபால் லோம்ரோர் 60 ரன்களும் கார்த்திக் சர்மா 35 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் ராஜஸ்தானின் ஸ்கோர் 267 ஐ எட்டியது.
தமிழ்நாட்டின் பந்துவீச்சில், வருண் சக்ரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரத்தில், சந்தீப் வாரியர் மற்றும் சாய் கிஷோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தத் தோல்வி மூலம் ஐந்தாவது விஜய் ஹசாரே டிராபியை வெல்லும் தமிழ்நாடு அணியின் கனவு தகர்ந்தது. அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் அணி காலிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஹரியானாவை எதிர்கொள்ள உள்ளது.