ஐபிஎல் 12வது சீசனில் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்று நான்காவது முறையாக  கோப்பையை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

ஹைதராபாத்தில் நடந்த இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஜோடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்த போதிலும் மிடில் ஓவர்களில் ரன்ரேட் குறைந்தது. பொல்லார்டு அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தினார். எனினும் கடைசி இரண்டு ஓவர்களை தீபக் சாஹரும் பிராவோவும் அபாரமாக வீசி அந்த 2 ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.

20 ஓவர் முடிவில் 149 ரன்கள் அடித்து சிஎஸ்கே அணிக்கு 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை இந்தியன்ஸ். சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டுபிளெசிஸ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரெய்னா, ராயுடு, தோனி ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 

அதன்பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டத்திற்குள் வந்தது. ஆட்டம் மும்பை வசம் இருந்த சமயத்தில் 16வது ஓவரில் 20 ரன்களை கொடுத்தார் மலிங்கா. அதன்பின்னர் பும்ரா 17 மற்றும் 19 ஆகிய இரண்டு ஓவர்களையும் அபாரமாக வீசினார். கடைசி ஓவரில் சிஎஸ்கேவின் வெற்றிக்கு 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. முதல் 5 பந்துகளில் 7 ரன்கள் அடிக்கப்பட்டது. இந்த ஓவரின் 4வது பந்தில் வாட்சன் ரன் அவுட்டானார். ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தில் தாகூரை அவுட்டாக்கினார் மலிங்கா. இதையடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.