கேகேஆருக்கு எதிரான தோல்விக்கு பின் அதற்கான காரணத்தை கூறினார் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா. 

ஐபிஎல் 15வது சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுவரும் நிலையில், சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் படுதோல்விகளை அடைந்துவருகின்றன.

சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய 2 அணிகளுமே இதுவரை ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசியில் உள்ளன. 

5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஆடிய 3 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்தது. முதல் 2 போட்டிகளில் டெல்லி கேபிடள்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்று கேகேஆருக்கு எதிராக ஆடிய 3வது போட்டியிலும் படுதோல்வி அடைந்தது.

புனேவில் மும்பை இந்தியன்ஸும் கேகேஆரும் நேற்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா 3 ரன்னில் ஆட்டமிழந்து மீண்டும் ஒருமுறை ஏமாற்றினார். அதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. ஆனால் சூர்யகுமார் யாதவும்(52), திலக் வர்மாவும்(38) இணைந்து அருமையாக பேட்டிங் ஆடினார். பொல்லார்டு கடைசி ஓவரில் 3 சிக்ஸர் விளாசி நன்றாக முடித்து கொடுத்தார். இதையடுத்து 161 ரன்கள் அடித்தது மும்பை அணி.

162 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணியில் ரஹானே(7), ஷ்ரேயாஸ் ஐயர்(10), சாம் பில்லிங்ஸ்(17), நிதிஷ் ராணா(8), ஆண்ட்ரே ரசல்(11) ஆகியோர் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் தட்டுத்தடுமாறி களத்தில் நீடித்து அரைசதம் அடித்தார்.

இலக்கு மிகக்கடினமானது இல்லையென்றாலும், 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் மும்பை அணி நம்பிக்கையுடன் போராடியது. ஆனால் டேனியல் சாம்ஸ் வீசிய 16வது ஓவரில் பாட் கம்மின்ஸ் அடி நொறுக்கிவிட்டார். அந்த ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளை விளாசி அந்த ஓவரிலேயே இலக்கை எட்டி ஆட்டத்தை முடிக்கவைத்தார் கம்மின்ஸ். 15 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 56 ரன்களை விளாசினார் கம்மின்ஸ். 5 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் வெற்றி பெற, மும்பை அணி இந்த சீசனில் 3வது தோல்வியை பதிவு செய்தது.

போட்டிக்கு பின் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, கம்மின்ஸ் இப்படி ஆடுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவருக்கு கிரெடிட் கொடுத்தே தீர வேண்டும். ஆடுகளம் போகப்போக பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆரம்பத்தில் நின்று வந்தது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் நல்ல பிட்ச். பேட்டிங்கை பொறுத்தமட்டில் நாங்கள் நன்றாக தொடங்கவில்லை. கடைசி 4-5 ஓவர்களில் 70 ரன்களுக்கு மேல் கிடைத்தது பேட்டிங் யூனிட்டின் கடும் முயற்சியால் தான். பவுலிங்கில் திட்டமிட்டபடி செயல்படவில்லை. 15வது ஓவர் வரை ஆட்டம் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால் கம்மின்ஸ் ஆடிய விதம் அபாரமானது. அதன்பின்னர் களத்திற்கு வரவிருந்த சுனில் நரைனும் அருமையாக பேட்டிங் ஆடுவார். இந்த தோல்வியை ஜீரணிக்கவே முடியவில்லை என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.