ஐபிஎல் 12வது சீசனின் கடைசி லீக் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. 

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் கேகேஆரிடம் வாங்கிய அடிக்கு தரமான பதிலடி கொடுத்தது மும்பை இந்தியன்ஸ். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் லின், கில், ராணா, தினேஷ் கார்த்திக், ரசல், நரைன் என நல்ல பேட்டிங் ஆர்டரை கொண்ட கேகேஆர் அணியை வெறும் 133 ரன்களுக்கு சுருட்டி, 134 ரன்கள் என்ற இலக்கை 17வது ஓவரிலேயே எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ். 

மும்பைக்கு எதிரான கடந்த போட்டியில் 40 பந்துகளில் 80 ரன்களை குவித்த ரசல், இந்த போட்டியில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். கேகேஆர் அணியை எளிதாக ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தி அதன்மூலம் நெருக்கடியை அதிகரித்து விக்கெட்டுகளை வீழ்த்தினர் மும்பை இந்தியன்ஸ் பவுலர்கள்.

மும்பை இந்தியன்ஸ் பவுலர்களின் சிறப்பான பவுலிங்கால்தான் அந்த அணிக்கு வெற்றி எளிதானது. போட்டிக்கு பின்னர் பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்த்தனேவிடம், பவர்பிளேயில் அதிக பவுலர்களை பயன்படுத்தியது மற்றும் ஆண்ட்ரே ரசலுக்கு ஸ்லோ பவுன்ஸர் போட்டது ஆகியவை ஏற்கனவே திட்டமிடப்பட்டவையா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயவர்த்தனே, எதிரணி கணித்துவிடாத வகையில் பந்துவீசுவதுதான் எங்கள் திட்டம். 

கொல்கத்தாவில் நடந்த போட்டியில் அவர்களின் கணிப்பு சரியாகும் வகையில் நடந்துவிட்டோம். எனவே அதேபோன்று இந்த போட்டியிலும் நடந்துவிடக்கூடாது என்பதால் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்க முயற்சித்தோம். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேக் கொடுத்தார். பின்னர் மலிங்கா தனது அனுபவ பவுலிங்கால் சில விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கிடையே ரன்களை கட்டுப்படுத்தி குருணல் பாண்டியா எதிரணிக்கு நெருக்கடியை அதிகரித்தார் என மும்பை இந்தியன்ஸின் பவுலிங்கை பாராட்டினார் ஜெயவர்த்தனே.