Asianet News TamilAsianet News Tamil

பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே மிரட்டிய மும்பை..! 200 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி

இமாச்சல பிரதேசத்துக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் 200 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
 

mumbai beat himachal pradesh by 200 runs in vijay hazare trophy match
Author
Jaipur, First Published Mar 1, 2021, 9:41 PM IST

மும்பை மற்றும் இமாச்சல பிரதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜெய்ப்பூரில் இன்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி, சூர்யகுமார் யாதவ், ஆதித்ய தரே மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோரின் அபாரமான பேட்டிங்கால் 50 ஓவரில் 321 ரன்களை குவித்தது.

மும்பை அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா, ஜெய்ஸ்வால் மற்றும் 3ம் வரிசை வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூவரும் தலா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். சர்ஃபராஸ் கானும் 11 ரன்னில் ஆட்டமிழக்க, 49 ரன்னுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது மும்பை அணி.

அதன்பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆதித்ய தரே ஆகிய இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், 75 பந்தில் 91 ரன் அடித்து சூர்யகுமார் ஆட்டமிழக்க, அதன்பின்னர் தரேவும் ஷர்துல் தாகூரும் சேர்ந்து சிறப்பாக ஆடினர்.

ஆதித்ய தரே 88 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய ஷர்துல் தாகூர் 57 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில், வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து ஷர்துல் தாகூர் ஆடிய அருமையான இன்னிங்ஸ் தான் இந்திய அணியை காப்பாற்றியது. அதே தன்னம்பிக்கையுடன் விஜய் ஹசாரேவில் ஆடிவரும் ஷர்துல் தாகூர், இந்த போட்டியில் வெறும் 57 பந்த்ல் 92 ரன்களை குவித்து மிரட்டினார்.

அவரது அதிரடியால் தான் மும்பை அணி 50 ஓவரில் 321 ரன்களை குவித்தது. இதையடுத்து 322 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இமாச்சல பிரதேச அணியில் எந்த வீரரையும் நிலைக்கவே விடாமல், மும்பை பவுலர்கள் வெறும் 24.1 ஓவரில் 121 ரன்களுக்கு சுருட்டினர்.

இமாச்சல பிரதேச வீரர்கள் யாருமே சரியாக ஆடவில்லை. 9ம் வரிசையில் இறங்கிய மயன்க் தாகர் அதிகபட்சமாக 38 ரன்கள் அடித்தார். பேட்ஸ்மேன்கள் யாருமே அந்த ஸ்கோர் கூட அடிக்கவில்லை. மும்பை அணியின் பிரசாந்த் சோலங்கி அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தினார். ஷாம்ஸ் முலானி 3 விக்கெட்டும் தவால் குல்கர்னி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். மும்பை அணியின் அருமையான பவுலிங்கால் வெறும் 121 ரன்களுக்கு சுருண்டது இமாச்சல பிரதேச அணி.

பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே அசத்திய மும்பை அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios