உள்நாட்டு ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே தொடர் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இன்று ஜெய்ப்பூரில் மும்பைக்கும் டெல்லிக்கும் இடையேயான போட்டி நடந்தது. டாஸ் வென்ற மும்பை அணி, டெல்லியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் தவான் மற்றும் அனுஜ் ராவத் ஆகிய இருவருமே டக் அவுட்டாகினர். 3ம் வரிசையில் இறங்கிய ஹிம்மத் சிங் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு பின் இறங்கிய நிதிஷ் ராணா, ஜாண்டி சித்து, லலித் யாதவ் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 8ம் வரிசையில் பேட்டிங் இறங்கிய ஷிவான்க் வஷிஷ்ட் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்தார். அவரும் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடித்த ஹிம்மத் சிங் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 106 ரன்களை விளாச, அவரது பொறுப்பான பேட்டிங்கால் 50 ஓவரில் 211 ரன்கள் அடித்தது டெல்லி அணி.

212 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான பிரித்வி ஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடினார். இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக 2018 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலேயே இந்திய அணியில் எடுக்கப்பட்ட பிரித்வி ஷா, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் தொடர் சொதப்பல் மற்றும் காயம் காரணமாக அணியில் வாய்ப்பை இழந்தார்

ஐபிஎல்லிலும் கடந்த சீசனில் ஒன்றிரண்டு இன்னிங்ஸ்களை தவிர மற்ற அனைத்திலும் படுமோசமாக சொதப்பினார். இவ்வாறாக தொடர்ச்சியாக சொதப்பிவந்த பிரித்வி ஷா, தனது திறமையை மீண்டும் நிரூபிக்கும் விதமாக, இந்த போட்டியில் டெல்லிக்கு எதிராக அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். 89 பந்தில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 105 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 212 ரன்கள் என்ற இலக்கு எளிதானது என்பதால், பிரித்வி ஷாவின் அதிரடியால் 32வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை அணி.