பாகிஸ்தானில் டி20 சூப்பர் லீக் தொடர் நடந்துவருகிறது. முல்தான் சுல்தான்ஸ் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முல்தானில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பெரிதாக ஆடவில்லை. மூன்றாம் வரிசையில் ஆடிய கேப்டன் ஷான் மசூத் அதிரடியாக ஆடி 46 ரன்கள் அடித்தார். கடந்த போட்டியில் அடி வெளுத்தெடுத்த மொயின் அலி, இந்த போட்டியில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். 

ஆனால் தென்னாப்பிரிக்க வீரரான ரூசோ, இந்த போட்டியில் குவெட்டா கிளாடியேட்டர்ஸின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய அவர், அணியின் ஸ்கோரை அதிவேகமாக உயர்த்தினார். களத்தில் நிலைத்து நின்று தெளிவாக அடித்து ஆடிய அவர், வெறும் 44 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார். ரூசோவின் அதிரடி சதத்தால் சுல்தான்ஸ் அணி 20 ஓவரில் 199 ரன்களை குவித்தது. 

200 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் ஆடிய குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஜேசன் ராயும் ஷேன் வாட்சனும் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ராய் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஒருமுனையில் ஷேன் வாட்சன் நிலைத்து ஆட, மறுமுனையில் சீரான இடைவெளியில் கிளாடியேட்டர்ஸ் அணி விக்கெட்டுகளை இழந்தது. அதிரடியாக ஆடி வெறித்தனமாக இலக்கை விரட்டிய ஷேன் வாட்சன் 41 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவித்து 16வது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் அவுட்டாகும்போது ஸ்கோர் 139 ரன்கள். அதன்பின்னர் அந்த அணி எஞ்சிய 4 ஓவரில் 30 ரன்கள் மட்டுமே அடிக்க, 20 ஓவரில் 169 ரன்கள் மட்டுமே அடித்தது. 

Also Read - ரிவியூ எடுப்பதில் படுமோசமான முடிவு.. கோலிக்கு நிகர் கோலியே

வாட்சன் அதிரடியாக ஆடிய போதிலும், அவருக்கு யாரும் ஒத்துழைப்பு கொடுத்து ஆடாததால் வெறும் 169 ரன்கள் மட்டுமே அடித்தது கிளாடியேட்டர்ஸ் அணி. இதையடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சுல்தான்ஸ் அணி. அபாரமாக ஆடி சதமடித்து சுல்தான்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ரூசோ ஆட்டநாயகன் விருதை வென்றார்.