முகமது ரிஸ்வானின் அதிரடி அரைசதத்தால் 167 ரன்கள் என்ற சவாலான இலக்கை 19வது ஓவரிலேயே அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது முல்தான் சுல்தான்ஸ் அணி. 

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற முல்தான் அணி, பெஷாவர் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் அணி 20 ஓவரில் 166 ரன்கள் அடித்தது. அந்த அணியில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, அதிகபட்சமாக 56 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர்கள் காம்ரான் அக்மல் 35 ரன்களும் ஹைதர் அலி 28 ரன்களும் அடித்தனர்.

167 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய முல்தான் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான முகமது ரிஸ்வான் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷான் மசூத் 14 ரன்னில் ஆட்டமிழந்தாலும், 3ம் வரிசையில் இறங்கிய சொஹைப் மக்சூத், ரிஸ்வானுடன் இணைந்து அடித்து ஆடி அவரும் அரைசதம் அடித்தார். 

31 பந்தில் 61 ரன்கள் அடித்து மக்சூத் ஆட்டமிழக்க, ரிஸ்வான் கடைசி வரை களத்தில் நின்று 82 ரன்கள் அடித்து 19வது ஓவரிலேயே 167 ரன்களை அடித்து முல்தான் அணியை வெற்றி பெற செய்தார்.