உலக கோப்பை அணி தேர்வு பெரும் சர்ச்சையான நிலையில், முக்கியமான சர்ச்சை குறித்து தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் நேற்று அறிவித்தார். அதன்பின்னர் அவரிடம் உலக கோப்பை அணி தேர்வு, ராயுடு நீக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

அவை அனைத்திற்கு பிரசாத் பதிலளித்தார். அப்போது, தொடக்க வீரர் தவானுக்கு பதிலாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை அணியில் எடுத்தது குறித்தும், பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் விஜய் சங்கர் காயத்தால் விலகியதை அடுத்து மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த ராயுடுவை எடுக்காமல் மயன்க் அகர்வாலை எடுத்தது ஏன்? என்ற கேள்விக்கு எம்.எஸ்.கே.பிரசாத் பதிலளித்தார். 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பவுண்டரி லைனில் கேட்ச் பிடிக்க டைவ் அடிக்கும்போது ராகுல் கீழே விழுந்தார். அதன்பின்னர் அந்த போட்டியில் அவர் ஃபீல்டிங் செய்யவில்லை. எனவே அவரது உடற்தகுதி குறித்த அச்சமும் அணி நிர்வாகத்திற்கு இருந்தது. எனவே தான் விஜய் சங்கர் காயத்தால் விலகியதை அடுத்து மாற்று தொடக்க வீரர் ஒருவர் தேவை என்று அணி நிர்வாகத்திடமிருந்து எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்பட்டது. எனவே அணி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று மயன்க் அகர்வால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டார் என்று எம்.எஸ்.கே.பிரசாத் பதிலளித்தார்.