தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

வரும் 15ம் தேதி(நாளை) இந்த தொடர் தொடங்கவுள்ளது. முதலில் டி20 தொடரும் அதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. 

டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பிவந்த தொடக்க வீரர் கேஎல் ராகுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷுப்மன் கில் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறங்கவுள்ளார். உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, தென்னாப்பிரிக்க தொடரில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தொடரிலும் பாண்டியா புறக்கணிக்கப்பட்டுள்ளார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), சஹா(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஷ்வின், பும்ரா, இஷாந்த் சர்மா, ஷமி, குல்தீப் யாதவ், ஷுப்மன் கில். 

ஹர்திக் பாண்டியா டெஸ்ட் அணியில் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், இந்தியாவில் ஆடும்போது ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் அணியில் தேவையில்லை. உள்ளூர் தொடரில் பெரும்பாலும் ஸ்பின் பவுலர்களை அதிகம் பயன்படுத்துவது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் தேவையில்லை என்பதால், டீம் காம்பினேஷனை கருத்தில்கொண்டு ஹர்திக் பாண்டியா அணியில் எடுக்கப்படவில்லை என்று எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்தார்.

வெஸ்ட் இண்டீஸில் இந்திய அணி, 3 ஃபாஸ்ட் பவுலர்கள், ஒரு ஸ்பின் ஆல்ரவுண்டர், 7 பேட்ஸ்மேன்கள் என்ற காம்பினேஷனில் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸில் ஆடியது. ஆனால் இந்திய கண்டிஷனில் 2 ஃபாஸ்ட் பவுலர்கள், 2 ஸ்பின்னர்கள், 7 பேட்ஸ்மேன்கள் என்ற காம்பினேஷனில் இறங்கும். எனவே ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் தேவையில்லை.

ரோஹித், மயன்க், புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் ஆகிய 7 பேட்ஸ்மேன்களும் ஜடேஜா, அஷ்வின், பும்ரா, இஷாந்த் சர்மா ஆகிய 11 வீரர்களுடன் இந்திய அணி களமிறங்கும். இந்தியாவில் இந்திய அணி இப்படித்தான் 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கும். எனவே இந்த அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு தேவையில்லை.