வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று தொடர்களுக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 

டெஸ்ட் அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காயத்தால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த சஹா, காயத்திலிருந்து மீண்டு முழு உடற்தகுதியை பெற்றிருப்பதால், மாற்று விக்கெட் கீப்பராக சஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

சஹா காயத்தால் ஆடமுடியாமல் போனதால் தான் கடந்த ஆண்டு நடந்த  இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடித்தார். 2018ன் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சஹா ஆடியதுதான் கடைசி. அதன்பின்னர் சஹா ஆடவேயில்லை. 

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் மாற்று விக்கெட் கீப்பராக சஹா எடுக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் தொடர்ந்து சிறப்பாக ஆடிவரும் ஆந்திராவை சேர்ந்த கே.எஸ்.பரத் அணியில் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டது. 

ஆனால் அவர் அணியில் எடுக்கப்படவில்லை. சஹா உடற்தகுதி பெற்றுவிட்டதால் அவரை நீக்க முடியாது என்பதால் அவரே இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், இந்தியா ஏ அணியில் ஆடும் வீரர்களின் ஆட்டங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அதனால் தான் ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர். கே.எஸ்.பரத் அபாரமாக ஆடிவருகிறார். அவர் அணியில் கிட்டத்தட்ட தேர்வு செய்யப்பட்டார் என்றே கூற வேண்டும். 

ஆனால் சீனியர் வீரர் காயத்தில் இருந்து மீண்டு முழு உடற்தகுதி பெற்றிருந்தால் அவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனடிப்படையில் தான் சஹா எடுக்கப்பட்டார். ஆனால் கேஎஸ் பரத் அபாரமாக ஆடிவருகிறார். இந்தியா ஏ அணியில் ஆடி 3 சதங்கள் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் 50 டிஸ்மிஸல்கள் என மிரட்டியுள்ளார். கிட்டத்தட்ட அணியில் இடம்பெற்றுவிட்டார் என்றே கூற வேண்டும். ஆனால் சஹா சீனியர் வீரர் என்பதன் அடிப்படையில் அவர் அணியில் இடம்பிடித்தார் என்று பிரசாத் விளக்கமளித்தார்.