இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பவுலிங் பயிற்சியாளராக பரத் அருணும் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஸ்ரீதரும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரை கபில் தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக்குழு தேர்வு செய்த நிலையில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களை தேர்வுக்குழு நேர்காணல் நடத்தி தேர்வு செய்தது. 

பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வு செய்யப்பட்டார். பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் மாற்றப்படவில்லை. ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஆல்டைம் பெஸ்ட் ஃபீல்டர் ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்திருந்தார். 

ஸ்ரீதர் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு, அணியின் ஃபீல்டிங் தரத்தை உயர்த்தியுள்ளார் என்பதில் மாற்று கருத்தில்லை. அதனால் அவரே மீண்டும் தொடர்வார் என்பதும் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் அதேநேரத்தில் ஃபீல்டிங்கின் அடையாளமாக திகழும் ஜாண்டி ரோட்ஸை என்ன காரணம் சொல்லி புறக்கணிக்க போகிறார்கள் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. 

ஜாண்டி ரோட்ஸ் புறக்கணிக்கப்பட்டிருந்தால் கூட பரவாயில்லை. அவரது பெயரை பரிசீலிக்கவே இல்லை என்பதுதான் கொடுமை. ஷார்ட் லிஸ்ட் பண்ணப்பட்ட டாப் 3ல் கூட ஜாண்டி ரோட்ஸின் பெயர் இல்லை என்பதே மிகப்பெரிய அதிர்ச்சிகரமான விஷயம். 

இதுகுறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தற்போதைய சூழலில் உலகளவில் சிறந்த ஃபீல்டிங் பயிற்சியாளர்களில் ஸ்ரீதரும் ஒருவர். உலக கோப்பையில் 3 விக்கெட் கீப்பர்கள் இருந்ததால், இந்திய அணியின் ஃபீல்டிங்கில் சற்று சறுக்கல் இருந்திருக்கலாம். ஆனால் இந்திய அணியை தரமான ஃபீல்டிங் அணியாக உயர்த்தியிருக்கிறார் ஸ்ரீதர். அதனால் வேறு யாரையும் அந்த இடத்திற்கு யோசிப்பதற்கே வேலையில்லாமல் போய்விட்டது என்றார். 

ஜாண்டி ரோட்ஸ் புறக்கணிப்பு குறித்து பேசிய எம்.எஸ்.கே.பிரசாத், ஸ்ரீதரே முதன்மை தேர்வு என்பதால் அவரை தேர்வு செய்துவிட்டோம். அதேநேரத்தில் டாப் 3ல் ஒருவராக ஜாண்டி ரோட்ஸை தேர்வு செய்தால் இந்தியா ஏ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு ஜாண்டி ரோட்ஸ் வருவார். ஆனால் அவரது தகுதிக்கு இவையெல்லாம் சிறிய பதவிகள் என்பதால் அவருக்கு அது சரியாக வராது என்பதால் டாப் 3ல் அவரை தேர்வு செய்யவில்லை என்றார். 

கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் தலைசிறந்த ஃபீல்டர் என்றால் அது தென்னாப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் தான். தென்னாப்பிரிக்க அணியில் 1992 முதல் 2003ம் ஆண்டுவரை ஆடினார். பாயிண்ட் திசையில் நின்று அவர் பிடித்த அபாரமான கேட்ச்களும் செய்த மிரட்டலான ரன் அவுட்டுகளும் காலத்தால் அழியாதவை. ஃபீல்டிங் என்றால் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் ஜாண்டி ரோட்ஸ் தான். ஃபீல்டிங்கின் அடையாளமாகவே ஜாண்டி ரோட்ஸ் திகழ்கிறார் என்பது சொல்லி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் அல்ல.