முழு விவசாயியாகவே மாறிய தோனி.. தன் விளைநிலத்தை டிராக்டரில் தானே உழுத தோனி..! வைரல் வீடியோ
இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் தோனி, தனது விளைநிலத்தை தானே டிராக்டரில் உழவு செய்யும் வீடியோ வைரலாகிவருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்ததுடன், கேப்டனாக இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த வீரர் என்ற பெருமைக்கும் சாதனைக்கும் சொந்தக்காரர்.
ஐபிஎல்லில் 234 போட்டிகளில் ஆடியுள்ள தோனி, 4978 ரன்களை குவித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு 4 முறை ஐபிஎல் டிராபியை ஜெயித்து கொடுத்திருக்கிறார்.
IND vs AUS: அஷ்வினுக்கு பயந்து ஆளை மாற்றிய ஆஸ்திரேலிய அணி..! அந்த பயம் இருக்கணும்டா
சர்வதேச கிரிக்கெட்டில் கடைசியாக 2019ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலக கோப்பையில் ஆடிய தோனி, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். ஐபிஎல்லில் மட்டும் தொடர்ந்து ஆடிவருகிறார் தோனி.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தோனி, சினிமா, விவசாயம் என பல துறைகளில் சுறுசுறுப்பாக இயங்கிவருகிறார். சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி தமிழ் திரைப்படவுலகில் கால் பதிக்கிறார் தோனி.
அத்துடன் ராஞ்சியில் உள்ள தனது பண்ணையில் ஏக்கர் கணக்கில் விவசாயமும் செய்துவருகிறார். தனது பண்ணை நிலத்தில் தானே டிராக்டர் மூலம் உழவு செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த தோனி, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் தனி மகிழ்ச்சிதான் என்றும், ஆனால் விவசாய வேலையை முடிக்க நீண்டநேரம் ஆவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் வீடியோ செம வைரலாகிவருகிறது.
தோனியை பார்க்க மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் ஆயிரக்கணக்கான கமெண்ட்டுகளை அள்ளி தெளித்துவருகின்றனர்.