சென்னை ரொம்பவே ஸ்பெஷல்: சென்னைக்காரங்க என்னை எப்போதோ தத்தெடுத்துவிட்டனர் – எம்.எஸ்.தோனி!
முதல் டெஸ்டும் சென்னையில் தான், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்ததும் சென்னையில் தான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியுள்ளார்.
கிரிக்கெட்டில் வரலாற்று சாதனைகள் நிகழ்த்திய எம்.எஸ்.தோனி சினிமாவில் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலமாக எல்.ஜி.எம் LGM என்று அழைக்கப்படும் Lets Get Married என்ற படத்தை தயாரித்துள்ளார். ரமேஷ் தமிழ்மணி என்கின்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, தொகுப்பாளர் விஜய், சாண்டி ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் எல்.ஜி.எம்.
மனைவியுடன் சென்னையில் தோனி.. சிறப்பாக வெளியிடப்பட்ட LGM பட ட்ரைலர் - கூர்க் ட்ரிப் போக ரெடியா?
காதல் வயப்பட்டு திருமணத்தை நோக்கி நகரும் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா இடையே ஏற்படும் சிறு வாக்குவாதத்தால், காதலனின் தாயை திருமணத்திற்கு முன்பு ட்ரிப் ஒன்றுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார் நாயகி இவானா.
அந்த ட்ரிப்பில் அவர்களுக்கு என்ன நடந்தது, இறுதியில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்களா? இல்லையா? என்பதை நகைச்சுவை கலந்த காட்சிகளோடு சொல்ல வரும் திரைப்படம் தான் LGM என்பது, வெளியான ட்ரைலரில் இருந்து தெரிய வந்துள்ளது. சென்னையில் இன்று நடந்த இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் தோனி, தனது மனைவி சாக்ஷியுடன் கலந்து கொண்டு டிரைலவரை வெளியிட்டனர்.
அதன் பிறகு பேசிய தோனி, சென்னையில் தான் முதல் டெஸ்ட் போட்டி விளையாடினேன். அதிக டெஸ்ட் போட்டி ரன்கள் அடித்ததும் சென்னையில் தான். சென்னை மக்கள் என்னை எப்போதோ தத்தெடுத்துவிட்டனர். எனது முதல் படமும் தமிழில் நடந்துள்ளது. படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவும் சென்னையில் தான் நடக்கிறது.
படத்தைப் பொறுத்தவரையில் குறுகிய காலத்திலேயே எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் உணவு முறையாக வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தேன். படப்பிடிப்பில் நான் எந்த குறுக்கீடும் செய்யவில்லை. படம் எடுத்து முடிக்கப்பட்டவுடன் எனக்கு ஒரு முறை போட்டு காட்டுங்கள். படத்தில் எனக்கு என்ன பிடித்திருந்தது என்று கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னையில் எனக்கு கிடைக்கும் அன்பை யாராலும் விவரிக்க முடியாது. சென்னை எனக்கு மிகவும் முக்கியமான நகரம் தான்.