Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல்லில் ஓய்வு எப்போது..? சிஎஸ்கே வெற்றி விழாவில் தோனி அதிரடி அறிவிப்பு

ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெறுவது எப்போது என்று சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி, சிஎஸ்கே 4வது முறையாக கோப்பையை வென்றதற்கான பாராட்டு விழாவில் பேசியபோது தெரிவித்தார்.
 

ms dhoni reveals his ipl retirement plan in csk celebration ceremony held at chennai
Author
Chennai, First Published Nov 20, 2021, 6:55 PM IST

ஐபிஎல் 14வது சீசனில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. 2008ம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல்லில் 2010, 2011, 2018 மற்றும் 2021 ஆகிய 4 சீசன்களில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது.

ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக பிளே ஆஃபிற்கே முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, அந்த படுதோல்வியிலிருந்து மீண்டெழுந்து, 14வது சீசனில் கோப்பையை கைப்பற்றியது. மும்பை இந்தியன்ஸூக்கு (5 முறை) அடுத்தபடியாக அதிகமுறை (4) கோப்பையை வென்ற அணி என்ற சாதனைக்கு சொந்தக்கார அணியாகவும், ஐபிஎல்லின் வெற்றிகரமான அணியாகவும் திகழ்கிறது சிஎஸ்கே.

சிஎஸ்கே அணி 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக, சிஎஸ்கே அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இந்த விழாவில் சிஎஸ்கே கேப்டன் தோனி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, சிஎஸ்கே அணி உரிமையாளர் என்.ஸ்ரீநிவாசன், ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பாட்டீல், இந்திய அணியின் உலக கோப்பை வின்னிங் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, தமிழக ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு உலகம் முழுதும் எங்கு ஆடினாலும் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். தமிழக ரசிகர்களின் கிரிக்கெட் மீதான பார்வை, கிரிக்கெட்டை ரசிக்கும் விதம் ஆகியவற்றை பற்றி பேசிய தோனி, கடைசியாக தனது ஓய்வு குறித்தும் பேசினார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஐபிஎல்லில் மட்டுமே ஆடிவருகிறார். எனவே அவரது ஆட்டத்தை ஐபிஎல்லில் சிஎஸ்கேவிற்காக ஆடும்போது மட்டுமே பார்க்கமுடியும். எனவே தோனி இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல்லில் ஆடவேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக இருந்தாலும், அவருக்கு 40 வயதாகிவிட்டதால் இனியும் தொடர்ந்து ஆடுவது கடினம். அதுமட்டுமல்லாது தோனி எப்போது என்ன செய்வார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். திடீரென ஐபிஎல்லில் இருந்து ஓய்வு அறிவிக்கக்கூட வாய்ப்புள்ளது. அதனால் அவர் என்ன செய்வாரோ என தெரியாமல் ரசிகர்கள் பதறிப்போய் உள்ளனர்.

அடுத்த சீசனில் புதிதாக 2 அணிகள் இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. எனவே தோனி என்ன முடிவெடுப்பார் என்பதை ரசிகர்கள் பேராவலுடனும் பதற்றத்துடனும் எதிர்நோக்கியுள்ள நிலையில், அதுகுறித்து இந்த விழாவில் பேசினார்.

தனது ஓய்வு குறித்து பேசிய தோனி, எனது கடைசி டி20 போட்டியை சென்னையில் தான் ஆடுவேன். ஆனால் அது அடுத்த ஆண்டா அல்லது 5 ஆண்டுகளுக்கு பிறகா என்று சொல்லமுடியாது என்று கூறி சிரித்தார் தோனி.

கடைசி போட்டியை சென்னையில் தான் ஆடுவேன் என்று தோனி கூறியதால் கண்டிப்பாக அடுத்த சீசனில் ஆடுவார் என்பது உறுதியாகிவிட்டது. இதைக்கேட்டு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் உள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios