தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் சிஎஸ்கே அணிக்கு முன்னாள் கேப்டனும் சீனியர் வீரருமான தோனி முக்கியமான மற்றும் எளிமையான மெசேஜ் கூறியுள்ளார்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் புதிதாக களமிறங்கியுள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்துவரும் அதேவேளையில், பலமுறை கோப்பையை வென்ற சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு மோசமான தொடக்கமாக அமைந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளன. தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, இந்த சீசனில் ஜடேஜா தலைமையில் சிஎஸ்கே அணி ஆடிவரும் நிலையில், ஜடேஜாவின் கேப்டன்சியில் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் தோற்றது சிஎஸ்கே அணி.
கேகேஆரிடம் தோற்ற சிஎஸ்கே அணி, லக்னோ அணிக்கு எதிராக 210 ரன்கள் அடித்தும், அந்த ஸ்கோருக்குள் லக்னோ அணியை கட்டுப்படுத்த முடியாமல் சிஎஸ்கே அணி தோல்வியை தழுவியது. பஞ்சாப் கிங்ஸூக்கு எதிரான போட்டியில் 181 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் 54 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது சிஎஸ்கே அணி. தொடர்ச்சியாக 3 தோல்விகளை தழுவிய சிஎஸ்கே அணி, முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.
அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை எதிர்கொள்ளவுள்ள நிலையில், தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் சிஎஸ்கே அணிக்கு தோனி முக்கியமான அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார்.
”பிராசஸில் கவனம் செலுத்துங்கள். ரிசல்ட் தானாக வரும்” என்ற தனது தாரக மந்திரத்தைத்தான் சிஎஸ்கே அணிக்கு மெசேஜாக கூறியுள்ளார் தோனி.
மேலும், கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்த வீரரான ருதுராஜ் கெய்க்வாட், இந்த சீசனில் முதல் 3 போட்டிகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்துள்ள நிலையில், அவருக்கும் அறிவுரை கூறியுள்ளார் தோனி. ருதுராஜிடம், “ஸ்லோ ஸ்டார்ட்டை பற்றியெல்லாம் கவலைப்படாமல் உனது இயல்பான ஆட்டத்தை ஆடு” என்று கூறியுள்ளார் தோனி.
எத்தனையோ வளர்ச்சி - வீழ்ச்சி, வெற்றி - தோல்வி, பாராட்டு - விமர்சனம், ஏற்ற - இறக்கங்களை தனது கெரியரில் கடந்துவந்துள்ள தோனியின் அறிவுரையும், அவர் கொடுத்த உத்வேகமும் சிஎஸ்கே அணி வலிமையுடன் திரும்ப உதவும் என்று நம்பலாம்.
