இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியின் டிக்கெட் கலெக்டர் வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை, 2007 ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என்று மூன்று ஐசிசி டிராபிகளை வென்று கொடுத்தார். இந்திய அணி மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து 5 முறை டிராபியை வென்று கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், தான் தோனி ரயில்வே அணிக்காக விளையாடும் போது காரக்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றினார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட டிக்கெட் பரிசோதகருக்கான அப்பாய்ண்ட்மெண்ட் லெட்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. தோனி ஆரம்பத்தில் ரயில்வே வேலையில் இருப்பதா அல்லது தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்வதா என்ற குழப்பத்தில் இருந்தார்.
இதையடுத்து ரயில்வே வேலையை உதறிதள்ளிவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் முழு கவனம் செலுத்தினார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த தோனி கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆனால், இந்தப் போட்டியில் அவர் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இதே போன்று 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். மேலும், 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இதுவரையில் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய தோனி 4876 ரன்களும், 350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10,773 ரன்களும், 98 டி20 போட்டிகளில் விளையாடி 1617 ரன்களும் எடுத்துள்ளார். இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தெதி தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
