தற்போது 42 வயதாகும் தோனி குஜராத் டைட்டன்ஸ் வீரர் விஜய் சங்கர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டைவ் அடித்து பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையிலான ஐபிஎல் 7ஆவது போட்டி தற்போது எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி சிஎஸ்கே முதலில் பேட்டிங் செய்தது. இதில் ரச்சின் ரவீந்திரா முதலில் அடித்துக் கொடுக்க, அதையே பிடித்து, ஷிவம் துபேயும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இதில் அவர் 51 ரன்கள் எடுத்து கொடுத்து ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் மட்டும் 11 சிக்சர்கள் அடிக்கப்பட்டது. கடைசியாக சிஎஸ்கே 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர், 207 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில், சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு தீபக் சாகர் வீசிய பந்து விருத்திமான் சகா ஹெல்மெட்டை பதம் பார்த்தது. அடுத்த பந்திலேயே சகா 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த விஜய் சங்கர் 12 பந்துகளில் ஒரு சிக்சர் உள்பட 12 ரன்கள் மட்டுமே அடித்து டேரில் மிட்செல் பந்தில் விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், அந்த கேட்ச் தோனி டைவ் அடித்து பிடித்து அசத்தியுள்ளார்.
தற்போது 42 வயதாகும் தோனி வயது நம்பர் மட்டுமே என்பதை திரும்ப திரும்ப உணர்த்தி வருகிறார். தோனி கேட்ச் பிடித்ததை ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழந்தனர். இவ்வளவு ஏன், சமூக வலைதளத்தில் தோனியை சிங்கத்துடனும், புலியுடனும் ஒப்பிட்டு மீம்ஸ் பதிவிட்டனர்.
