பவுலர்களை வைத்து புதிய திட்டம் போடும் ரோகித் சர்மா – பேட்டிங் பயிற்சியில் பந்து வீச்சாளர்கள்!
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிராஜ் மற்றும் பும்ரா இருவரும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விறுவிறுப்பாக நடந்து வந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் 9 நாட்களில் யார் அந்த உலகக் கோப்பை சாம்பியன் என்பது தெரிந்துவிடும். இதற்கான போட்டியில் தற்போது இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கடைசியாக நியூசிலாந்து அணியும் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடைசியாக வரும் 12 ஆம் தேதி நடக்கும் 45ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடக்கும் இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், ஹர்திக் பாண்டியாவிற்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் சிராஜ், பும்ரா மற்றும் ஷமி இவர்களில் யாரேனும் ஒருவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணா இடம் பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அதே போன்று குல்தீப் யாதவ் அல்லது ரவீந்திர ஜடேஜாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெறவும் வாய்ப்புகள் இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகிய இருவரும் பேட்டிங் பயிற்சி செய்துள்ளனர். பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தலைமையில் இருவருக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக பந்து வீச்சாளர்களுக்கும் பேட்டிங் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதில், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு மட்டுமின்றி அரையிறுதிப் போட்டிக்கும் இந்திய அணிக்கு பக்க பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.